-
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 'ஷூ'அணிவது கட்டாயமாகிறது
சென்னை: இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் கண்டிப்பாக `ஷூ' அணிந்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் சி.தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் புகைப்படங்கள் அந்தந்த கல்லூரி இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும். மேலும், அனைத்து பொறியியல் கல்லூரி ஆசிரியர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும், புகைப்படத்துடன் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பெறப்பட உள்ளன.
வேதியியல் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சி செய்யும் மாணவர்கள்
அமிலங்களை மிதிக்க நேரலாம், எலக்ட்ரிக் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் மின்சார ஒயர்களை மிதிக்க நேரலாம். அமிலங்கள் மற்றும் மின்சார தாக்குதல்
உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படாமல் இருக்க மாணவர்கள் `ஷூ' அணிவது நல்லது. இந்த முடிவு அவர்களின் பாதுகாப்பு
நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனுக்கு எப்படி உடையும், காற்றும் இன்றியமையாததோ அதே போன்று மாணவர்களின் பாதுகாப்புக்கு `ஷூ' அத்தியாவசியமானது. எனவே, அவர்கள் கட்டாயமாக கல்லூரிக்கு `ஷூ' அணிந்து தான் செல்ல வேண்டும். இவ் வழக்கம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதற்கான சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
more
-
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: வீடுகளுக்கு 300 யூனிட் வரை இல்லை
சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும் வீடுகளுக்கு மாதத்திற்கு 300 யூனிட் வரை மின் கட்டணம் பழையபடியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின் கட்டண விகிதத்தை இன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன் தெரிவித்தார்.
30 பைசா முதல் ரூ. 1.10 வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில மின்சார வாரியத்திற்கு கூடுதலாக ரூ. 1651 கோடி வருவாய் கிடைக்கும்.
இருப்பினும் மாதம் 300 யூனிட்டுக்கும் கீழே மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர், குடிசைவாசிகள், கைத்தறிக் கூடங்கள், மின்தறிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், விவசாய நுகர்வோர் ஆகியோருக்கு உயர்வு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், வீடுகளில் மாதத்திற்கு 300 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் போது ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ. 1 அதிகரித்து ரூ. 5.75 வசூலிக்கப்படும்.
அரசு உதவி பெறும் கல்வி
நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 4.40 ல் இருந்து ரூ. 4.80 அதிகரிக்கப்படுகிறது. சினிமா
தியேட்டர்களுக்கு யூனிட்டுக்கு ரூ4.40ல் இருந்து ரூ.5.50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடிசை மற்றும் சிறு ரக தொழிற்சாலைகளுக்கு 1800 யூனிட்டுகள் வரையிலான பயன்பாட்டுக்கு பழைய கட்டணமும், அதற்கு மேல் செல்லும் பட்சத்தில் யூனிட்டுக்கு ரூ. 3.80 ம் விகிதத்திலும் மின்கட்டணம் வசூலிக்கப்படும்.
ஷாப்பிங் காம்ப்ளக்சுகளுக்கும் 1800 யூனிட்டுகளுக்கு மேல் செல்லும் போது ரூ. 5.00 வசூலிக்கப்படும்.
முதல் முறையாக 50 யூனிட்டுக்கும் கீழே பயன்படுத்தும் பெட்டிக்கடைக்காரர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 1 குறைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 2.32 கோடி மின்சார நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களில் 2.15 கோடி பேருக்கு மின் கட்டண உயர்வால் பாதிப்பு இருக்காது.
சிறு விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்தில் கடைசியாக 2003ம் ஆண்டு மார்ச் 16ம் தேதிதான் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றார் கபிலன்.
more
-
சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: சென்னைக்கு கடல் குடிநீர் வழங்கும் திட்டத்தை இன்று மாலை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
கருணாநிதி
.
இதன் மூலம் சென்னைக்கு தினசரி 10 கோடி லிட்டர் கடல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியமும், சென்னை கடல் நீர் குடிநீராக்கல் நிறுவனம் (வாட்டர் டிசாலிநேசன் லிமிடெட்) இணைந்து சென்னை மாநகரின் தேவைக்காக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்தத் திட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கையெழுத்தானது. தற்போது திமுக ஆட்சியில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரூ. 600 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. வடிவமைப்பின் பொறியியல் பணிகளை மேற் கொள்ளுதல், நிதியினை திரட்டுதல், உபகரணங்களை வாங்குதல், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், திட்டத்தை செயல்படுத்துதல், தொடர்ந்து 25 ஆண்டுகள் நிர்வகித்தல் பின்னர் பெருநகர குடிநீர் வாரியத்திடம் ஒப்படைத்தல் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கடல் நீரிலிருந்து தினந்தோறும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இந்த குடிநீர் வழங்கும் பணிகளை 25 ஆண்டுகள் சென்னை வாட்டர் டிசாலிநேசன் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ளும்.
இத்திட்டத்தின் தொடக்க விழா இன்று மாலை 5மணிக்கு காட்டுப்பள்ளியில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரையாற்றுகிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மீன்வளத்துறை அமைச்சர்க கே.பி.பி.சாமி வாழ்த்துரை வழங்குகிறார். தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி முன்னிலை வகிக்கிறார்.
திட்டம் தொடர்பாக சென்னை வாட்டர் டிசாலிநேசன் நிறுவன இயக்குனர்
எஸ்.ராமச்சந்திரன் கூறுகையில், கூறுகையில், கடல்நீரை குடிநீராக்கும் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்து விட்டது. சென்னை பெருநகரின் குடிநீர் தேவைகள் இதன் மூலம் பூர்த்தியாகும். மாநகரில் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவும்.
இத்திட்டத்தின் மூலம் சென்னை நகரில் 20 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். குடிநீர் வாரியத்திற்கு லிட்டருக்கு 4.8 பைசா என்ற அடிப்படையில் குடிநீர் வழங்கப்படும்
திட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கடந்த 25ம் தேதி முதல் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துக்கு இத் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4 கோடி லிட்டர், 6 கோடி லிட்டர் என உயர்ந்து தற்போது 8 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. முதல்வர் கருணாநிதி
இத்திட்டத்தை துவக்கும்போது 10 கோடி லிட்டராக விநியோகிக்கப்படும் என்றார்.
இத்திட்டத்திற்காக காட்டுப்பள்ளியில், 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், மணலியில் 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி, மாதவரத்தில் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், செங்குன்றத்தில் 6 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை தவிர, சுமார் 38 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சென்னை நகர விநியோகத்திற்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
more
-
தமிழகத்தில் பல ரயில்களின் நேரம் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இரவு 8.50 மணிக்கு பதிலாக 8.05 மணிக்கும்,
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி
வரை செல்லும் நெல்லை
எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கும்,
எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.45 மணிக்கு பதிலாக இரவு 9.15 மணிக்கும்,
எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம்
செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.55 மணிக்கு பதிலாக இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.
அதே போல திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.45 மணிக்கு புறப்படும்,
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.15 மணிக்கு பதிலாக மாலை 5 மணிக்கும்,
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கு பதிலாக 10.20 மணிக்கும் திருச்சியிலிருந்து புறப்படும்.
மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்டு 5ம் தேதி முதல் இரவு 9.45 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகஸ்டு 6ம் தேதி முதல் ரயில் 7.40 மணிக்குப் பதிலாக மாலை 5 மணிக்கு அந்த ஊரில் இருந்து புறப்படும்.
அதே போல மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 5.30 மணிக்கு வர வேண்டிய ரயில் காலை 5.10 மணிக்கும்,
நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ரயில் காலை 6 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு காலை 6.15 மணிக்கு வரவேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் 6.35 மணிக்கும்,
ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூருக்கு காலை 6.40 மணிக்கு வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.25 மணிக்கும், மதுரையில் இருந்து எழும்பூருக்கு காலை 7.55 மணிக்கு வரவேண்டிய ரயில் காலை 7.20 மணிக்கும்,
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 5.10 மணிக்கு வரவேண்டிய மலைகோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.30 மணிக்கும் வந்து சேரும்.
இதே போல எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 9 மணிக்குப் பதிலாக காலை 8.15 மணிக்கு சென்று சேரும்.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 8.50 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கும்,
எழும்பூரில் இருந்து காலை 6.45 மணிக்கு மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைய வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் காலை 11.45 மணிக்கும் வந்து சேரும்.
இதில் நாகர்கோவில்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 7ம் தேதி முதலும், மதுரை-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 6ம் தேதி முதலும், மற்ற ரயில்கள் 2ம் தேதி முதலும் நேரம் மாற்றப்பட்ட அட்டவணைபடி இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
more
-
டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு : ஆகஸ்ட் 1 முதல் ஸ்டிரைக் நடத்த பரிசீலனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும், டோல்கேட் வரியை குறைக்கக் கோரியும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்த முடிவு எடுக்க, அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக்குழு கூட்டம், வரும் 12ல் டில்லியில் கூடுகிறது.
கடந்த ஜூன் 25ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இது லாரி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து, கடந்த 5ம் தேதி நடந்த பொது வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு, லாரிகளை இயக்க வில்லை. "பெட்ரோல், டீசல் விலையை எக்காரணம் கொண்டும் குறைக்க மாட்டோம்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து, ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வரும்12ம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்கமான அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக் குழு கூட்டம், தலைவர் சண்முகப்பா தலைமையில் டில்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில, மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, வரும் 21ல் தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவரசக் கூட்டம் தலைவர் நல்லதம்பி தலைமையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடக்கிறது. டீசல் விலை உயர்வு, டோல்கேட் வரி உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பதால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்த முக்கிய முடிவும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள லாரி தொழிலில், டீசல் விலை உயர்வால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாடு தழுவிய ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்தும், அதற்கான தேதியும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
more
-
கேட்ட கதையும்; கேட்காத பாடமும் - கரும்புலிகள்!!
கரும்புலிகள் கதை கேளு
மரணமெல்லாம் தூசி பாரு,
ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து
அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு;
கரும்புலிகள் உதிரம் பூத்து
கடல்கூட அழுது சிவந்தது பாரு -
உயிரும் வருடமும் பலிகொடுத்தும்
ஈழம் மட்டும் - இலங்கையாச்சி பாரு;
மில்லர் போல பலபேரின்
இலட்சியக் கனவு சாமாதியில் பாரு -
கமலுக்காக ஒரு பெண்ணின்
கட்டாத தாலி விதவையாச்சி பாரு;
அங்கையர்கன்னி வரலாறெல்லாம்
கடலெழுதிக் கொண்டது பாரு -
பெண்கள் செய்த சாகசங்கள் - கூட
வெற்றிகொண்ட மரணமாச்சி பாரு;
காந்தரூபன், கொலின்ஸ், டாம்போவின் இறப்பெல்லாம்
விடுதலையின் வேட்கை பாரு -
உயிர்கள்; பல கொடுத்து - காத்த ஈழம்
முள்ளிவாய்க்காலோடு மௌனமாச்சி பாரு;
ஒன்றா இரண்டா உயிர்கொடுமை
எல்லாம் -
ஈழமண்ணின் வீரம் பாரு -
விட்ட உயிர்கள் முளைத்தொரு நாள்
எங்கள் தேசம் வெல்லும்; உறுதி பாரு;
கரும்புலிகள் கதை படித்தால்
செத்த -
பிணம் கூட வீரங் கொள்ளும் பாரு;
கரு விதைத்த கரும்புலிகளின்
சமாதி கூட பாடம் புகட்டுது பாரு!!
more
-
தமிழுக்கு வந்த சோதனை...! இருப்பது 60 இடம்; சேர்ந்தது 8 பேர்
காரைக்குடி :தமிழில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என செம்மொழி மாநாட்டில் முதல்வரின் அறிவிப்புக்கு பின்னரும் தமிழ் கல்லு£ரிகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமல் உள்ளது.
தமிழகத்தில் மதுரையில் செந்தமிழ் கல்லு£ரி, திருவையாறில் அரசர் தமிழ் கல்லு£ரி, தஞ்சை மாவட்டத்தில் கரந்தை தமிழ் கல்லு£ரி, மேலச்சிவபுரியில் சன்மார்க்க சபையின் கணேசர் செந்தமிழ் கல்லு£ரி, காரைக்குடியில் ராமசாமி தமிழ் கல்லு£ரி, பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லு£ரி என 6தமிழ் கல்லு£ரிகளில் இருந்தன.
தற்போது, மதுரை, காரைக்குடியில் உள்ள கல்லு£ரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மற்ற கல்லு£ரிகள் கலைக்கல்லு£ரிகளாக மாற்றப்பட்டு விட்டன. பிளஸ்2 தேர்வுகள் முடிந்து மாணவர்கள் கல்லு£ரிகளில் சேர்ந்து வரும் நிலையில் தமிழ் கல்லு£ரிகளில் மட்டும் சேர்க்கை குறைவாகவே இருந்தது.
சமீபத்தில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் நிறைவில் தமிழில் படிப்பவர்களுக்கு வேலைவாய்பில் முன்னுரிமை என சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் இக்கல்லு£ரிகளில் சேர்க்கை அதிகமாக இருக்கும் என நினைத்தனர்.ஆனாலும் தமிழ் படிப்பதில் மாணவர்களிடையே ஆர்வம் குறைவாக உள்ளதால் மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. மதுரை செந்தமிழ்கல்லு£ரியில் 70 இடங்களுக்கு சுமார் 50மாணவர்களும், காரைக்குடி ராமசாமி கல்லு£ரியில் 60 இடங்களுக்கு சுமார் 8பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
கல்லு£ரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்கல்லு£ரிகளில் சேர இடம் கிடைக்காமல் இருந்தது. ஆசிரியர் பயிற்சி கல்லு£ரிகள் வருகைக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கை குறைந்து தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்து தான் இணை பேராசிரியர்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்தும். இதற்கு குறைந்தது 22மாணவர்களாவது சேர வேண்டும். மாணவர் சேர்க்கையை பொருத்தவரை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பல்கலைக்கழகம் காலக்கெடுவை நீட்டித்தால் ஆகஸ்ட் வரை சேர்க்கை நடத்தலாம், என்றார்.
தமிழாசிரியர்களுக்கு பற்றாக்குறை:காரைக்குடி கல்லு£ரியை பொருத்தவரை கடந்த 2005&2006ல் 45மாணவர்களும், 2007&2008ல் 27 மாணவர்களும், 2008&2009ல் 26 மாணவர்களும், 2009&2010ல் 30 மாணவர்களும் சேர்ந்தனர். இந்த கல்வியாண்டியில் இதுவரை 8பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் வரும் ஆண்டுகளில் தமிழ் படிக்க மாணவர்களே இல்லாத நிலை ஏற்படலாம். இதன் மூலம் பள்ளிகளில் தமிழாசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது, என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
more
-
பயங்கரவாதி அப்சல் குரு காங்கிரசாருக்கு மருமகனா ? நிதின் கட்காரி ஆவேச கேள்வி
புதுடில்லி: பார்லி., தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பயங்கரவாதி காங்., கட்சிக்கு மருமகனா? என்ற கட்காரியின் பேச்சு டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது. இவரது கேள்வியில் எவ்வித தவறும் இல்லை என பா.ஜ., தரப்பில் பதில் தரப்பட்டிருக்கிறது.
பா.ஜ., அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசும் போது, லாலு, மாயாவதி, மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர், காங்., தலைவர் சோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து ( நாய்கள் போல) சுற்றி வருகின்றனர் என்று பேசியிருந்தார். கட்காரியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பை கிளம்பியது. பின்னர் தான் ஒரு உவமையாகத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என கட்காரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டேராடூனில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. டில்லி முதல்வரிடம் கேட்டால் உள்துறை உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறுகிறார். அறிக்கைகள் மீது அமர்ந்து இருக்கிறாரா முதல்வர்? அப்சல் குருவை காப்பாற்ற ஏன் காங்கிரஸ் முயற்சிக்கிறது? அப்சல்குரு என்ன காங்கிரசாருக்கு மருமகனா? இவருக்கு பெண் கொடுக்கப் போகிறீர்களா என்று கேட்டார்.
பொங்கி எழுந்தது காங்., : கட்காரியின் இந்த பேச்சு காங்., மத்தியில் கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவரது பேச்சுக்கு காங்., தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்., மேலிடம் வெளியிட்டுள்ள செய்தியில், கட்காரி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், கட்காரியின் பேச்சு மோசமாக உள்ளது. இவ்வாறு இழி சொல்லை பேசுவதை நிறுத்திக கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதற்காக நான் ஒன்றும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என கட்காரி கூறியுள்ளார். பா.ஜ., வும் கட்காரியின் பேச்சில் தவறு ஒன்றும் இல்லை என கூறியுள்ளது.
more
-
ஸ்பெயின் சாம்பியன்: ஆக்டோபஸ் பால் கணிப்பு
பெர்லின்: உலகையே அசத்தி வரும் ஆக்டோபஸ் ஆரகல் பால் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றிபெறும் என கணித்துள்ளது.
விவரம் வருமாறு: ஜெர்மனியின் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் பால் என்ற ஆக்டோபஸ், கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக சொல்லி பிரமிக்க வைத்து வருகிறது.
தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் ஆக்டோபஸுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது. ஆக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ, அந்த அணிதான் வெற்றி பெறுகிறது.
கானா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதிய போது ஜெர்மனி தான் வெற்றி பெறும் என ஆக்டோபஸ் சொன்னது பலித்தது. பலமிக்க செர்பியா அணியுடன் ஜெர்மனி தோற்கும் என்றது. அதுவும் சரியாக நடந்தது. இந்த நிலையில், கால் இறுதியில் அர்ஜென்டினாவை ஜெர்மனி வீழ்த்தும் என கணித்தது.
இதுவும் சரியாக நடந்து விட்டது. தொடர்ந்து ஜெர்மனியை சரியாக கணித்து வரும் ஆக்டோபஸ் அரை இறுதியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு தான் அரையிறுதியிலும் ஆக்டோபஸ் கணிப்பின்படி ஸ்பெயின் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதே போன்று மீண்டும் ஆக்டோபஸ் கணிப்பின்படி நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றிபெறுமா என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் உலகையே அசத்தி வரும் ஆக்டோபஸ் பால் கணிப்பு உண்மையாகி, ஸ்பெயின் சாம்பியனாகுமா என்பது வியப்பாகவே உள்ளது.
more
-
கொழும்பு ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டது-ஊழியர்கள் திரும்பப் பெறப்பட்டனர்
கொழும்பு : புலிகளை கொல்வதில் இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்பதை முதலில் உலக அளவில் தெரியப்படுத்தியது ஐ.நா., அதிகாரிகள் தான். இந்த நாள் முதல் இலங்கை பெரும் அதிருப்தியில் இருந்து வந்தது. ஆனால் இது போன்று நடக்கவில்லை என்றும், ஆதாரங்கள் இல்லையென்றும் கூறி வந்தது. இது தொடர்பான விஷயத்தில் இலங்கை ஐ.நா.,வுடன் ஒத்துபோகாமல் உரசல் இருந்து வந்தது.
இந்நிலையில் இலங்கையில் ஐ.நா., அலுவலகத்தை மூட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க அதிகாரிகள் குழுவை ஐ.நா., நியமித்தது, இதற்கு இலங்கை ஆளும் அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள ஐ.நா., தூதரகம் முன்பாக போராட்டம் நடத்த தேசிய சுதந்திர முன்னணியினர் முடிவு செய்தனர். ஆளும் அரசவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச தலைமை வகித்தார், இதனால் ஐ.நா., அலுவலகம் உள்ளே அலுவலர்கள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டது.
இதனால் எரிச்சலும், கோபமும் அடைந்த ஐ.நா., செயலர் பான் கீ மூன், இங்கு ஐ.நா., அலுவலகத்தை மூடி விட முடிவு செய்தார். கொழும்பு ஐ.நா., ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நிலைக்கு வரவேண்டியதாக செயலர் நாயகம் தெரிவித்துள்ளார். இங்கு பணியாற்றும் அலுவலர்கள் நியூயார்க் திரும்புமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவின் நெருக்கமான நண்பன் : இது குறித்து இலங்கை எவ்வித கவலையும் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சீனாவின் நெருக்கமான நண்பராக இருக்கும் இலங்கை ஐ.நா., வை கண்டு கொள்ளாமல் இருப்பதில் ஆச்சரியம் இருக்க தேவையில்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்
more
-
கார்த்தியுடன் காதலா? : தமன்னா பரபரப்பு பேட்டி!
‘‘கார்த்தியை காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை’’ என்றார் தமன்னா. 'பையா' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார் தமன்னா. இதையடுத்து இப்போது மீண்டும் கார்த்தியுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாகவும் தன்னுடன் நடிக்க தமன்னா பெயரை கார்த்தி சிபாரிசு செய்வதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமன்னா அளித்த சிறப்பு பேட்டி:
என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாக பழகுவேன். கார்த்தியுடனும் அப்படித்தான் பழகினேன். சூர்யாவுடன் 'அயன்' படத்தில் நடித்தபோது கார்த்தியை பற்றி நிறைய சொல்வார். 'என்னுடன் நடிப்பதைவிட கார்த்தியுடன் நடிக்கும்போது நேரம் போவதே உங்களுக்கு தெரியாது. காரணம், கார்த்தி கலகலப்பாக பேசக்கூடியவன்' என்பார். அவர் சொன்னது உண்மைதான் என்பதை ஷூட்டிங் ஸ்பாட்டில் தெரிந்து
கொண்டேன்.
ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் நட்பாக பேசிக்கொள்வது தவறா? எங்களை பற்றி நிறைய தகவல்கள் வருகிறது. அதில் எதுவும் உண்மை இல்லை. கார்த்தியுடன் மீண்டும் இணைந்து நடிப்பது பற்றியும் கேட்கிறார்கள். இதற்கு முன் ஒரே ஹீரோ, ஹீரோயின் பல படங்களில் சேர்ந்து நடித்ததே இல்லையா? அப்படி பலர் இருக்கிறார்கள். அதனால் இதை பெரிதுபடுத்த தேவையில்லை.
வெளியிடங்களுக்கு எங்கு சென்றாலும் அப்பா, அம்மாவுடன்தான் செல்வேன். எந்த வெளியிடத்திலும் என¢னுடன் நடிக்கும் ஹீரோக்களையோ, பிற நடிகர்களையோ நான் சந்தித்ததே கிடையாது. அப்படி இருக்கும்போது இது போன்ற காதல் செய்திகளை கேட்டு சிரிப்புதான் வருகிறது. இப்போது கார்த¢தியுடன் நடிக்கும் படம் தவிர, தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். தெலுங்கில் இரு படங்களில் நடிக்கிறேன். இப்போதைக்கு சினிமாவில் கவனம் செலுத்துவது மட்டுமே எனது முதல் வேலை. இவ்வாறு தமன்னா கூறினார்.
more
-
அம்பாசமுத்திரம் அம்பானி பட விமர்சனம்
அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கருணாஸுக்கு எப்படியாவது அம்பானி ரேஞ்சுக்கு பணக்காரனாக வேண்டும் என்பது வெறி. இதற்காக பேப்பர் போடுவதிலிருந்து, சாவு வீட்டுக்கு பூ சப்ளை பண்ணுவது வரை அத்தனை வேலையும் செய்கிறார். தான் சென்னை வந்த புதிதில் தனக்கு வேலை வாங்கிக் கொடுத்த கோட்டா சீனிவாசராவ் மீது அன்பும், நம்பிக்கையும் அதிகம். அவர் புதிதாக கட்டிவரும் வரும் அடுக்குமாடி வணிக வளாகத்தில் தனக்கும் ஒரு கடை வேண்டும் என்று கேட்டு தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் சிறுக சிறுக அவரிடம் 35 லட்சம் ரூபாய் வரை கொடுத்து வைக்கிறார். இன்னும் 10 லட்சம் கொடுத்தால் கடை கிடைக்கும் என்கிற நிலையில் தனக்கு வாழ்வளித்த பேப்பர் ஏஜென்சியை விற்று அந்தப் பணத்தை கொண்டு போகும்போது கோட்டா இறந்து போகிறார். கருணாஸ் அவரிடம் கொடுத்த பணத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. பணத்தை கேட்டுப்போன இடத்தில் சீனிவாசராவின் மகன் கருணாஸை அடித்து துரத்துகிறான். தனது லட்சியத்துக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை ஒரு நிமிடத்தில் இழந்து நிற்கும் கருணாஸின் அம்பானி கனவு நிறைவேறியதா, இல்லையா? என்பது மீதிக் கதை. காமெடி என்ற பெயரில் வெட்டிக்கூத்தடிக்காமல், கருத்து சொல்கிறோம் என்று நோகடிக்காமல் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து இரண்டாவது முறையாக தன்னை மிடில் கிளாஸ் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார் கருணாஸ்.
சைக்கிள், தட்டுவண்டி, எம்80 ஸ்கூட்டரில் தினமும் காணும் அந்த பிசியான மனிதர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கருணாஸ். அதிகாலையில் பேப்பர் போடுவதிலிருந்து நள்ளிரவில் குல்பி ஐஸ் விற்பது வரையிலான அவரது கடின உழைப்பு ஆச்சர்யப்பட வைக்கிறது. அவரது உதவியாளராக வரும் மாஸ்டர் சங்கர், கருணாசுக்கு சரியான பக்க வாத்தியம். கடைசியில் அவனே துரோகம் செய்யும்போது கூட, ‘ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி டிரஸ் வாங்கினேன். ஒரே மாதிரி சாப்பாடு வாங்கினேன். ஆனா பணத்தை மட்டும் எனக்குன்னு சேர்த்துக்கிட்டேன். உனக்கும் பணம் தேவைப்படும்னு எனக்கு தோணாமப்போச்சே’ன்னு வருந்தும்போது உருக வைத்து விடுகிறார்.
அழகான பெண் கிடைத்து விட்டாள் என்பதற்காக உருகி உருகி காதலிக்காமல் காதல் அரும்பும் நேரத்தில் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீடு பார்த்துக் கொண்டு செல்வது நடைமுறை யதார்த்தம். எல்லாவற்றையும் இழந்து, புறப்பட்ட இடத்துக்கே திரும்பி ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்துக் கொண்டு அவர் அடிக்கடி கனவு காணும் ‘தண்டபாணி அண்ட் கோ’ விளம்பரத்தை சொல்லி ‘நேர்மையா உழைக்கிறவன் ஜெயிக்கவே முடியாதா’ என்று தலையிலடித்துக்கொண்டு அழும் காட்சி கல்மனதையும் கலங்கச் செய்துவிடும். லட்சியத்தை வெல்வதற்காக காதலை தள்ளி வைப்பதும், அவருக்கு காதல் உணர்வை வரவழைக்க நவ்னீத்கவுர் போடும் திட்டங்களும் காமெடி ஏரியா. காலையில் எழுந்ததும் ஒற்றைக் காலில் தவமிருந்து, ‘நான் அம்பானியாகணும், அம்பானியாகணும்’ என்று மந்திரத்தை உச்சரிக்க, மறுநாள் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஒத்தக்காலில் தவம் செய்து தங்கள் ஆசையை வெளிப்படுத்தும்போது ஒருவர், ‘நான் சும்மா இருக்கணும்... நான் சும்மா இருக்கணும்’ என்று சொல்வது ஹைலைட் காமெடி.
உழைப்பால் முன்னேறத் துடிக்கும் கருணாஸை, நவ்னீத் கவுர் காதலிப்பது ஆறுதல். ஒரே நாள் இரவில் அவர் நடுத்தெருவுக்கு வந்துவிட, கருணாஸ் இருக்கும் இடம்தேடிச் சென்று உரிமையோடு ஒட்டிக் கொள்வது அழகு. நவ்னித்துக்கு வாழ்க்கை கொடுக்கப்போகிறேன் என்று அவரை ஒருதலையாக
காதலித்துக் கொண்டிருக்கும், லிவிங்ஸ்டனை கொண்டு வந்து நிறுத்தும்போது குபீர் சிரிப்பு.
அண்ணாச்சி கோட்டா சீனிவாசராவும், அவரது மகன் சேரன்ராஜும் அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு கதர் சேலைக்காக கருணாஸின் அம்மா உயிர்விடும் அந்த கிராமத்து பிளாஷ் பேக்கும், வழக்கமான ஒரு கிளைமாக்சை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது நெகிழ வைக்கும் அந்த கிளைமாக்சும் பி.ராம்நாத்தை நல்ல இயக்குனராக அடையாளம் காட்டுகிறது. ‘பூ பூக்கும் தருணம்...’ மெலடியும், ‘ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்...’ டப்பாங்குத்தும் கருணாஸை கமர்சியல் இசை அமைப்பாளராக்குகிறது. புலித் தேவனின் ஒளிப்பதிவு காமெடியையும் கதையையும் வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கிறது.
கருணாசின் உழைப்பு, லட்சியம் என்ற நேர்கோட்டில் பயணிக்கும் கதை, நவ்னீத்கவுருக்கு காதல் பிறந்ததும் டிராக் மாறி பயணிக்கிறது.
அப்பாவியாக வரும் மாஸ்டர் சங்கரின் திடீர் வில்லன் அவதாரத்தை ஜீரணிக்க முடிவில்லை. கடைசியாக பத்து லட்சம் ரூபாய் கையிலிருந்தும் எல்லாவற்றையும் இழந்து விட்டதுபோல ரயில் நிலையத்தில் கருணாஸ் கதறுவதில் லாஜிக் இல்லை. இருந்தாலும், அம்பானி ‘நினைத்ததை முடித்தவன்’.
more
-
களவாணி பட விமர்சனம்
தஞ்சை மாவட்டத்திலுள்ள அந்த இரு சிற்றூர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை. காரணம், களவுபோன சாமி சிலை. அதிலும் களவாணித்தனம் செய்து கொண்டு திரியும் விமலுக்கும் எதிர் ஊரில் ரவுடித்தனம் செய்யும் திருமுருகனுக்கும் அடிக்கடி மோதல். இந்நிலையில் திருமுருகனின் தங்கை ஓவியாவை காதலிக்கிறார் விமல். இந்த காதலுக்கு திருமுருகன் மட்டுமின்றி, அவர்கள் ஊரே எதிர்ப்பு காட்டி நிற்கிறது. அதை மீறி தனது களவாணித்தனத்தால் காதலியை விமல் கரம்பிடிப்பது, கல கல கிளைமாக்ஸ்.
கதையில் புது விஷயம் எதுவும் இல்லை. கதை சொன்ன விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பதுதான் 'களவாணி' ஸ்பெஷல். முதல் காட்சியில் சிறுவர்களின் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இரு ஊர் சிறுவர்கள் மோதிக்கொள்ளும்போதே ஊர் பிரச்னையை ஜாலியாக சொல்லப்போகிறார்கள் என்பதை சூசகமாக சொல்கிறது படம். வன்முறை, திடுக்கிடு¢ம் காட்சிகள் இல்லாமல் அதை கடைசிவரை மெயின்டைன் செய்திருப்பது பேஷ் பேஷ்.
துபாயில் அப்பா இளவரசு சம்பாதித்து பணத்தை அனுப்புகிறார். அதை அம்மா சரண்யாவை மிரட்டி விமல் வாங்குவது, தனது நண்பர் குழுவுடன் சேர்ந்து கஞ்சா கருப்பை கலாய்ப்பது, ஒரே பஸ்சில் பயணிக்கும் இரண்டு பெண்களை ஓரிடத்தில் நின்றபடியே ப்ராக்கெட் போடுவது, காதலிக்கு உதவ அவரது பள்ளி பாடத்தை தங்கையை வைத்து எழுதச் செய்வது, தங்கைக்காக அப்பா கொண்டு வந்த உடைகள், மேக்அப் பொருளை தான் வாங்கியதாக காதலியிடம் தருவது என அக்மார்க் களவாணித்தன நடிப்பில் க்ளிக் ஆகிறார் விமல். 'பசங்க' படத்துடன் ஒப்பிடும்போது நடிப்பில் புரமோஷன் வாங்கியிருக்கிறார். புதுமுகம் ஓவியா, அச¢சு அசலாய் கிராமத்து மாணவி. காதல் வயப்பட்டு, 'உன¢னை கட்டிக்கிறேன்' என சொல்லும்போது லபக்கென இளசு இதயங்களில் டேரா போடுகிறார். புதுமுகம் திருமுருகன், கோலிவுட்டில் ரவுண்ட் அடிப்பார். அப்பாவித்தனமாய் விமல் கோஷ்டியிடம் சிக்கி, சுக்கு நூறாகும் கேரக்டரில் சிரிக்க வைக்கிறார் கஞ்சா கருப்பு. மகனின் தில்லுமுல்லு செயல்களையும் நியாயமாக்கும் பாசிட்டிவ் அம்மாவாக பளிச்சிடுகிறார் சரண்யா. இளவரசு, சூரி என அனைவருமே கச்சிதம்.
முதல் பாதியில் சில காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாம். அதிலும் ஓவியா பள்ளிக்கு செல்வதும் விமல் அவரை வழிமறிப்பதும் என அடிக்கடி காட்டுவதை தவிர்த்திருக்கலாம். திருமுருகன் யாருக்கு என்ன உறவு என்பது இடைவேளைக்கு பின்பே தெரிகிறது. எஸ்.எஸ். குமரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு கதையோடு கைகோர்த்துள்ளது. இயக்குனர் சற்குணத்துக்கு இது முதல் படம். யதார்த்த சினிமாவை இப்படியும் தரலாம் என நினைவூட்டியிருக்கிறார்.
more
Subscribe to:
Posts (Atom)













