• ஆகஸ்ட் 24-ம் தேதி போனி வர்மா - பிராகஷ் ராஜ் திருமணம்

    மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ், வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடன இயக்குநர்  போனி வர்மாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார்.

    மும்பையில் நடக்கும் இந்த திருமணத்துக்கு பாலிவுட், தெலுங்கு  மற்றும் குறிப்பிட்ட சில தமிழ் சினிமா  பிரமுகர்களை அழைத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

    இதற்கிடையே, அவர் தயாரித்துள்ள இனிது இனிது (ஹேப்பி டேஸ் தெலுங்கு பட ரீமேக்) படத்தை வாங்க ஆளில்லாத சூழ்நிலை உருவானது. இந்தப் படத்தை வெளியிட்ட பிறகே தனது திருமணம் குறித்து அறிவிக்கவிருந்தாராம் பிரகாஷ் ராஜ். ஆனால் படம் வெளியாகுமா என்பதே சிக்கலில் இருந்ததால், என்ன செய்வதென்ற தவிப்பில் இருந்தார்.

    இந்த நேரம் பார்த்து அவருக்குக் கைகொடுத்தார் கல்பாத்தி எஸ் அகோரம். இனிது இனிது படத்தின் முழு திரையரங்க உரிமையையும் கணிசமான விலைக்கு அவர் வாங்கிக் கொண்டார். அந்த சந்தோஷத்தில் இப்போது தனது திருமணத் தேதியை பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

    பிரகாஷ் ராஜுக்கு கல்பாத்தி அகோரம் தந்துள்ள திருமணப் பரிசு இது என்பதே கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது!

    திருமணம் முடிந்ததும், குலுமனாலிக்கு ஹனிமூன் செல்கின்றனர் போனிவர்மா - பிரகாஷ் ராஜ் ஜோடி.

    more
  • வம்சம் விமர்சனம்


    தனது முதல் படைப்பான பசங்க படத்தின் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதி கூறிய இயக்குநர் பாண்டியராஜ், தனது இரண்டாவது படைப்பான வம்சம் மூலம் பெரியவங்களுக்கு பிடித்ததும், பிடிக்காததுமான ஜாதியை படமாக்கி இருக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஏன் இந்த ஜாதி? வியாதி எல்லாம் பாண்டி? கதைப்படி மது,சூது என அலைந்து திரிந்து மறைந்த ரவுடி ரத்னத்தின் வாரிசு என்பதால் நாயகன் அன்பரசு எனும் அருள்நிதிக்கு ஊரில் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். அதனால் பக்கத்து ஊர் மலர்க்கொடி சுனைனா மீது அருளுக்கு பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது. இவர்களது காதல் பூத்து காய்த்து கனியாகும் தருவாயில் அன்பரசு என்ற அருள்நிதியின் ஊர் பெரியவர் சீனிக்கண்ணு ஜெயப்பிரகாஷிக்கும் சுனைனாவின் அப்பாவிற்குமிடையில் ஒரு குத்து வெட்டு கேஸ் பஞ்சாயத்து. அதில் ஜெயபிரகாஷின் மானம் மரியாதை எல்லாம் பறிபோக, கோவில் திருவிழா நாளில் அதற்கு பழிக்கு பழியாக சுனைனாவின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார் ஜெயப்பிரகாஷ். பொட்ட புள்ள என்றாலும் ஒத்த புள்ள என்பதால் ஆண் பிள்ளையாக வளர்ந்திருக்கும் சுனைனா, தன் அப்பாவை தீர்த்து கட்டிய ஜெயப்பிரகாஷை முச்சந்தியில் வைத்து சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாற்றால் அடிக்க, அருள்நிதி சுனைனாவின் காதலுக்கு எமனாகிறார்கள் ஜெ.பி.,யும் அவரது வாரிசும். ஊர் பெரிய மனிதரை பகைத்துக் கொண்டு அருள்நிதியும் இணைந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்பதற்கு மட்டுமல்ல நாயகரின் அப்பா ரவுடி ரத்தினத்தின் சாவிற்கு யார் காரணம்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை அளிக்க முயற்சிக்கிறது வம்சம் படத்தின் மீதிக்கதை.

    எப்பாடுபட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தில் வாரிசாக பிறந்த அன்பரசாக அருள்நிதி. அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்தலாக நடித்து ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்த பெருமை உடைய முதல்வர் தாத்தா கருணாநிதியின் பெயரை காபந்து செய்து விடுகிறார். நல்ல உயரம், வாட்டசாட்டமான உருவம் சாந்தமான முகம் என தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு தேவையான அத்தனை தகுதிகளும் அருள்நிதிக்கு கொட்டி கிடக்கிறதென்றால் மிகையல்ல. கிளாமர் ஹீரோயின் சுனைனா இதில் கிராமத்து ஹீரோயினாக மலர்கொடியாக பாவாடை தாவணியில் பளிச்சென்று நடித்திருக்கிறார். அதுவும் பசுமாட்டிற்கு அசின் என்று பெயர் வைத்து அதன் மூலம் அவரும், அருளும் வளர்க்கும் காதல் செம காமெடி! பத்தாததற்கு அருளின் காதலுக்கு உதவும் கஞ்சா கருப்பு வளர்க்கும் பூனைக்கு த்ரிஷா எனப்பெயர் சூட்டி தனக்கேற்ற எள்ளுருண்டையுடன் காதல் வளர்க்கும் கலகலப்பு வேறு. வில்லன் சீனிக்கண்ணூக ஜெயப்பிரகாஷ், மருதமுத்துவாக வரும் ராஜ்குமார், அருள்நிதியின் அம்மாவாக வரும் அனுபம்குமார், சொம்புமணி கஞ்சாகருப்பு, உள்ளிட்ட எல்லாரையும் விட கொஞ்ச காட்சிகளே வந்து மடிந்து போகும் ரவுடி ரத்னம் கிஷோர்குமாரின் நடிப்பு பிரமாதம். ஆனாலும் பெண்களை அடிக்கமாட்டாங்க நம்ம வம்சத்தில் என பெருமையாக சொல்லும் அந்த வம்சத்தில் சூதாடியாகவும், ஊதாரியாகவும் சுற்றி திரியும் கிஷோர் குமாரை அருள்நிதியின் அம்மா பெருந்தன்மையாக பேசுவது நெருடலாக இருக்கிறது. மதுவும் சூதுவும் கூட ஒரு வம்சத்தில் பெருமை சேர்க்கும் பட்டியலில் எப்போது சேர்ந்தது? எப்படி? எவ்வாறு சேர்ந்தது..? என்பது புரியாத புதிர்!

    படம் முழுக்க செல்போனை சிக்னலுக்காக மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாயகன் நாயகி உள்ளிட்ட எல்லோரும் மரத்தின் மீது ஏறி பேசுவது, பசுவுக்கு அசின் என்றும், பூனைக்கு த்ரிஷா என்றும் பெயர் சூட்டி தங்கள் காதலை வளர்ப்பது என காட்சிகளுடன் ஒட்டியே காமெடி காட்சிகளை நிறைவே இருந்தும் ஆரம்பம் முதல் கோவில் திருவிழா, அதை ஒட்டிய நீண்டநெடிய பாடல்காட்சி முதல் நாள், இரண்டாவது நாள் என பத்து பதினைந்து நாட்களும் மண்டகப்படி செய்வோரின் பெயர் பட்டியலை மைக்கில் வாசிப்பது... ஒரே ஜாதியின் பெருமை பேசுவதுஎன நிறையாவே இழுவையாக இருப்பதை தவிர்த்திருந்தால் வம்சம் மேலும்அம்சமாக இருந்திருக்கும். தன் மகனுக்காக மோகனா மூவிஸ் மு.க. தமிழரசு., மக்கள் தொடர்பு நிகிலில் தொடங்கி ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, இசை தாஜ்நூர், எழுத்து இயக்கம் பாண்டிராஜ் என எல்லோரையும் பார்த்து பார்த்து பொறுக்கி எடுத்திருக்கிறார். அதேபோல் ஒரே ஜாதியை உயர்த்தி பிடிக்கும் கதையை தவிர்த்து ஜனரஞ்சகமான கதையையும் தேர்ந்தெடுத்திருந்தால் வம்சம் மேலும் அம்சமாக இருந்திருக்கும். ஆகமொத்தம் அது இல்லாதபட்சம் வம்சம் அம்சமும் அல்ல! துவம்சமும் அல்ல!

    more
  • பத்தில் நான்கு இடம் எந்திரன் பாடல்களுக்கே!


    தமிழ், தெலுங்கு , இந்தி என இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கின்றன சூப்பர் ஸ்டார் ரஜினி , நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள எந்திரன் படத்தின் பாடல்கள்.

    தமிழில் டாப் 10 பாடல்களில் முதல் நான்கு இடங்களை எந்திரன் பாடல்களே பிடித்துள்ளன.

    மியூசிக்வேர்ல்டு டாப் 10-ல் கிளிமாஞ்சாரே... பாடல் தொடர்ந்து இரு வாரங்களாக முதல் இடத்தில் உள்ளது. அரிமா அரிமா பாடல் இரண்டாவது இடத்திலும், காதல் அணுக்கள் மூன்றாம் இடத்திலும், இரும்பிலே ஒரு இதயம்... பாடல் நான்காம் இடத்திலும் உள்ளன.

    மிர்ச்சி டாப் 10-ல் கிளிமாஞ்சாரோ முதல் இடத்திலும், மற்ற மூன்று பாடல்கள் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களிலும் உள்ளன.

    இந்தியிலும் எந்திரன் பாடல்கள் புதிய சாதனைப் படைத்துள்ளன. வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் இதன் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியில் அரிமா அரிமா மற்றும் ரஹ்மான் பாடியுள்ள பாடல் பெரும் வெற்றியடைந்துள்ளன. ரஜினி நடித்த படம் ஒன்றின் பாடல்கள் இந்த அளவு இந்தியில் பேசப்படுவது இதுவே முதல்முறை. தெலுங்கில் ஏற்கெனவே பரபரப்பான விற்பனையில் உள்ளன எந்திரன் ஆடியோ சிடிக்கள்.

    எந்திரனுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் தமிழில் எந்தப் படத்துக்கும் ஒப்பந்தமாகவில்லை. அவர் கைவசம் உள்ள இன்னொரு தமிழ்ப் படம் ரஜினியின் சுல்தான் தி வாரியர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கூட இந்த முறை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

    more
  • விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: ஸ்ரீபெரும்புதூரில் ஆர்ப்பாட்டம்-ஜெ

    சென்னை: விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூரில் க்ரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வயலூர், அகரம், உச்சிமேடு, சூராகபுரம், மும்முரகுப்பம், கன்னிகாபுரம், வாசனாம்பட்டு, திருப்பந்தியூர்,

    திருமணிகுப்பம், பன்னூர், நரசமங்கலம், கொட்டையூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கிளாய், சிறுகிளாய், பாடிசேரி, ராமாபுரம், வடமங்கலம், பூதேரிபண்டை, மாம்பாக்கம், இருங்குளம், மொளச்சூர்,

    திருமங்கலம், கண்டிகை, சோகண்டி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், ஆக மொத்தம், 6,921 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் திமுக அரசு தற்போது வெகு வேகமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்திற்காக, விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய விவசாய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய துர்ப் பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    தமிழ்நாட்டில் ஏற்கெனவே வேளாண் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இது போன்ற விவசாயிகளுக்கு எதிரான செயல் விவசாய உற்பத்தியை மேலும் குறைக்க வழி வகுக்கும். இது மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை இடிப்புக்கு ஆளாக நேரிடும்.

    இதை கண்டித்தும், க்ரீன் பீல்டு விமான நிலையத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சில நாட்களுக்கு முன்பு மேற்படி கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்ற போது, காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர்
    இது மட்டுமல்லாமல், கடம்பத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் கே. சுதாகர் உட்பட பொதுமக்கள் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்துள்ளனர். இந்த செயலை கண்டித்து நான் ஏற்கனவே அறிக்கை விடுத்திருந்தேன்

    இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளுவர் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

    more
  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-புதிய சலுகைகள் சென்னை : "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு திடீரென அறிவித்து உள்ளது. ஊழியர்கள் கடந்த 11ம் தேதி, "ஸ்டிரைக்' நடத்திய நிலையில், திடீர் சலுகை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளதோடு, ஊழியர்களின் கோரிக்கைக்கு படிந்துள்ளது.

    பணி நிரந்தரம் செய்தல், வார விடுமுறை என்பது போன்ற கோரிக்கைகளை, "டாஸ்மாக்' ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். அரசு கண்டு கொள்ளாததால், தனித்தனியாக போராடி வந்த அண்ணா தொழிற் சங்கபேரவை,ஏ.ஐ.டி. யூ.சி., - சி.ஐ.டி.யூ., - பாட்டாளி தொழிற் சங்கங்கள்ஒன்றாக இணைந்து,கூட்டு நடவடிக்கைகுழுவை துவக்கின. கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி ஒரு நாள், "ஸ்டிரைக்' நடத்தின. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம், "ஸ்டிரைக்' முறியடிக்கப் பட்டது. 90 சதவீதத்திற்கும் மேலான கடைகள் வழக்கம்போல் இயங்கின. போராட்டத்தை வெற்றி கரமாக முறியடித்த தமிழக அரசு, தற்போது, "டாஸ்மாக்' ஊழியர் களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்டபல்வேறு சலுகைகளை அறிவித்துள் ளது.

    முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: மேற்பார்வையாளர்கள் மாத தொகுப்பூதியம் 4,000த்திலிருந்து 4,500 ரூபாயாகவும், விற்பனையாளர்கள் தொகுப்பூதியம் 2,800லிருந்து, 3,200 ரூபாயாகவும், மதுக்கூட உதவியாளர் தொகுப்பூதியம் 2,100லிருந்து, 2,400 ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவர். "டாஸ்மாக்' பணியாளர் களின், "டிபாசிட்'டுக்கான வட்டி 3.5 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால்,ஆண்டு ஒன்றுக்கு மேற்பார்வையாளர்களுக்கு 1,250, விற்பனையாளர்களுக்கு 375 ரூபாய், உதவியாளர்களுக்கு 250 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்."டாஸ்மாக்' பணியாளர் களுக்குவழங்கப்படும் ஊக்கத்தொகை 1.5 சதவீதத்திலிருந்து, 1.75 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

    மதுபானவிற்ப னைக்குபின், கடைகளில் தேங்கும் காலி அட்டைப் பெட்டிகள், பணியாளர் களால் ஒப்பந்ததாரர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்படும் சேதம் 2.5 சதவீதமென கணக்கிடப் பட்டுள்ளது.அது, தற்போதுபணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப் படுகிறது. இனி அட்டைப் பெட்டிகள் சேதத்தினால் ஏற்படும் இழப்பை, நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இந்த சலுகைகள் அனைத்தும் வரும் செப்.,1முதல்நடைமுறைக்கு வரும். அரசின் தூய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பணியாற்றி வரும், "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு, அரசு உரிய நேரத்தில் சலுகைகளையும், உரிமைகளை அளிக்கும் என்பதற்கு, இது எடுத்துக்காட்டு. இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

    "டாஸ்மாக்' ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை முறியடிப்பதில் வேகம் காட்டிய தமிழக அரசு, தொழிற்சங்கங்களுடன் கூட ஆலோசிக்காமல், திடீரென பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவு, ஊழியர்களிடம் அரசு படிந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

    முக்கிய கோரிக்கை கதி? "டாஸ்மாக்' தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு வெளியிட் டுள்ள அறிக்கையில், "தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், அறிவிப்பை வெளியிட் டுள்ளதுமோசமான செயல். பணி நிரந்தரம், வார விடுமுறை, தினமும் எட்டு மணி நேர வேலை போன்ற முக்கிய கோரிக் கைகள் பற்றி, எந்த அறிவிப்பும் இல்லாமல், மற்ற அறிவிப்புக்கள், ஊழியர்களை திருப்திப் படுத்தாது என,தெரிவிக்கப் பட்டுள்ளது.

    more
  • மின்சாரமே இல்லாத நிலையில் இலவச பம்புசெட் எப்படி சாத்தியம்-நல்லகண்ணு கேள்வி தூத்துக்குடி: மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறும் நிலையில்,

    விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி  அறிவித்துள்ளது எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

    இது குறித்து தூத்துக்குடி , ஸ்ரீவைகுண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியதாவது,

    எல்லையை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை காக்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளது கண்டனத்திற்குரியது.

    தமிழக மீனவர்கள்  ஒன்றும் எல்லை தாண்டுவதில்லை. மாறாக சிங்கள கடற்படையினர் தான் நாகை, கோடியக்கரை உள்ளிட்ட நமது கடல் பகுதிக்குள் வந்து நமது மீனவர்களையே தாக்கிச் செல்லும் செயல் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறினார்.

    more
  • இலங்கை பொருள்களுக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்


    லண்டன்: தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையின் பொருள்களுக்கு இனி ஜிபிஎஸ் எனப்படும் வர்த்தகச் சலுகைகள் நிறுத்தப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

    இலங்கையில் இருந்து இறக்குமதியாகி ஐரோப்பியச் சந்தையில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.பி. என்றழைக்கப்படும் வர்த்தகச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்தது.

    இதன்படி, இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் அளித்துவிடும். இதனால் இலங்கைப் பொருட்களை ஐரோப்பிய சந்தையில் குறைந்த விலையில் விற்கும் வாய்ப்பு கிடைத்தது.

    இலங்கையைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்படும் ஏற்றுமதி அளவு ஆண்டிற்கு 3.7 பில்லியன் டாலர்களாகும். இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம். ஆனால் இந்த ஏற்றுமதியை இன்று முதல் அந்நாடு இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

    இதனால் அந்த நாட்டின் நிறுவனங்களுக்கு, பொதுவாக ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு பெறும் 3 பில்லியன் இலாபத்தில் 500 மில்லியன் இழப்பு, அதாவது 6ல் ஒரு பங்கு இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டு ஏற்றுமதி வர்த்தக அமைப்பு கூறியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய நெருக்கடியாகும்.

    ஏற்கனவே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மிகக் குறைந்த இலாப அளவுடன்தான் நடைபெறுகின்றன. தமிழர் அமைப்புகள் செய்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பல நிறுவனங்கள் இலங்கையின் பொருள்களை வேண்டாம் என்றும் மறுத்து வருகின்றன.

    more
  • இரு நாட்டு மீனவர்கள் இணக்கமாக தொழில் செய்ய இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை தேவை ராமேஸ்வரம்:  "மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடிப்பை கைவிட்டு, இருநாட்டு மீனவர்களும் இணக்கமாக கடலில் மீன்பிடித்தொழில் செய்ய இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் கூறினர்.  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது. தொடர்கதையாகி வரும் தாக்குதல் சம்பவத்திற்கு, தமிழக மீனவர்களின் மீன்பிடிப்பு முறைகளும் ஒரு காரணம். இருநாட்டு மீனவர்களும் இணக்கமாக மீன்பிடித்தொழில் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக மீனவர்களை சந்திக்க இலங்கை யாழ்பாணம் வடமராச்சி வடக்கு பகுதி மீனவர் சங்க தலைவர் சூரியகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் 20 பேர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.  பாம்பன் வடக்கு துறைமுகம் மற்றும் ராமேஸ்வரம் துறைமுகத்தை பார்வையிட்டு, கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை பார்த்து "ஒரே இடத்தில் இத்தனை படகுகளா?' என அதிர்ச்சியடைந்தனர். பின் மீனவர்களையும் , மீனவ சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.  இலங்கை மீனவ பிரதிநிதி குழு தலைவர் சூரியகுமார் கூறியதாவது:  பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மட்டும் மீன்பிடித்தொழிலை நம்பி, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன்வளத்தை அழிக்கக்கூடிய வலையை பயன்படுத்தி, இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் மீன்வளம் அழிவதோடு, எதிர்காலத்தில் ராமேஸ்வரம் கடல் பகுதிபோல் இலங்கை கடல் பகுதியும் மீன்வளம் அற்றதாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடிவலைகளை தவிர்ப்பதோடு இலங்கை கரை பகுதியில், மீன்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்திய-இலங்கை அரசுகள் பாக்ஜலசந்தி கடலில் மீன்வளத்தை காப்பதோடு, இருநாட்டு மீனவர்களும் நட்புறவுடன் மீன்பிடித் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இலங்கை மீன்வளத்துறை அதிகாரி லால் டி சில்வா கூறியதாவது:  தமிழக மீனவர்கள் மீன்வளத்தை அழிக்கும் தடை செய்யப்பட்ட வலைகளை தவிர்த்து, மீன்பிடி முறைகளை மாற்றி மீன்பிடித்தால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரலாம். தமிழக மீனவர்களுடன் நேரிடியாக பேச்சுவார்த்தை நடத்துவது நல்ல முயற்சி. பேச்சுவார்த்தையின் எடுக்கப்படும் முடிவு குறித்து, இலங்கை மீன்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தரப்படும். இருநாட்டு அரசுகளும் இதையே விரும்புகின்றன, என்றார்.

    more
  • வேண்டும் என்றே 'நோ பால்'- ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம்

    தம்புல்லா: இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியின் போது வேண்டும் என்றே நோபால் வீசியதற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவும், இலங்கை கிரிக்கெட்  போர்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா , நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர்.

    இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.

    இந்தியத் தரப்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். பிரவீன் குமார், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. ஆசிஷ் நெஹ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

    இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கியது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர் திணேஷ் கார்த்திக் தடுமாறியபடி ஆடினார். 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அதேபோல விராத் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் டக் அவுட் ஆக இந்தியா அதிர்ந்தது.

    இருப்பினும் ஷேவாக்கும், கேப்டன் டோணியும் இணைந்து மூழ்கத் தொடங்கிய கப்பலை நிலைநிறுத்தி ரன் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் மெதுவாக ஆடி வந்த ஷேவாக் பின்னர் அதிரடிக்குத் தாவினார். படு வேகமாக ஆடிய அவர் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டோணியும் அவுட் ஆகாமல் 23 ரன்களைச் சேர்த்தார்.

    இதனால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதை 34.3 ஓவர்களில் சாதித்தது இந்தியா.

    ரந்தீவின் 'சின்னப்புள்ளைத்தனம்':

    நேற்றைய போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்தீவ் சின்னப்புள்ளைத்தனமாக நடந்து கொண்டார்.

    35வது ஓவரின் தொடக்கத்தில் இந்தியா 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஷேவாக் 99 ரன்களுடன் இருந்தார். அவர் ஒரு ரன் எடுத்தால் சதம் கிடைக்கும் என்ற நிலை.

    இந்த நிலையில் ரந்தீவ் பந்து வீச வந்தார். முதல் பந்தை ஷேவாக் எதிர்கொண்டார். அதை அவர் அடிக்கவில்லை. பந்தை விக்கெட் கீப்பர் சங்கக்காரா பிடிக்கத் தவறியதால் அது நேராக பவுணட்ரிக்குப் போய் விட்டது. இதையடுத்து ஷேவாக் சதமடிக்கவும், இந்தியா வெல்லவும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.

    அடுத்து வீசப்பட்ட 2 பந்துகளையும் ஷேவாக் சந்தித்தார். இருப்பினும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தை ஷேவாக் சந்தித்தார். அப்போது பந்து லாவகமாக வந்ததால் அதைத் தூக்கி அடித்தார். பந்து சிக்சருக்குப் பறந்தது. ஆனால் நடுவர் அதை நோபால் என்று கூறி விட்டார்.

    இதனால் ஷேவாக் அதிர்ச்சி அடைந்தார். அவரது சத வாய்ப்பு பறிபோனது, அதேசமயம், இந்தியா வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், ரந்தீவ் வேண்டும் என்றே கிரீஸை விட்டு வெளியில் வந்து நோபாலாக வீசினார் என்று கிரிக்கெட் வர்னணையாளர்கள் சரமாரியாக விமர்சித்துத் தள்ளி விட்டனர். ஷேவாக் சதம் அடித்து விடாமல் தடுக்கவே இவ்வாறு அவர் நடந்து கொண்டதாகவும் விமர்சித்தனர்.

    ஷேவாக்கும் கூட ரந்தீவை தனது பேட்டியின்போது விமர்சித்தார். அவர் கூறுகையில், ஒரு இளம் வீரர் இவ்வாறு நடந்து கொண்டது அழகல்ல. ஒரு வீரர் 99 ரன்களில் இருக்கும்போது அவரை சதம் எடுக்க விடாமல் தடுக்க இதுபோல பவுலர்கள் நடந்து கொள்வது புதிதல்ல. ஆனால் வேண்டும் என்றே நோபால் போடுவது கிரிக்கெட் அல்ல. வளரும் வீரரான ரந்தீவ் இதுபோல செயல்படக் கூடாது என்றார் சற்றே கோபத்துடன்.

    ஆனால் ரந்தீவ் வேண்டும் என்றே பந்து வீசவில்லை என்று இலங்கை கேப்டன் சங்கக்காரா கூறினார்.

    இந்த நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும், ஷேவாக்கின் அறைக்குச் சென்ற ரந்தீவ் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

    இதுகுறித்து இந்தியகிரிக்கெட் அணியின் மேலாளர் ரஞ்சீவ் பிஸ்வாலை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் நிஷாந்த் ரணதுங்கா, நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ரந்தீவ் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

    அடுத்த போட்டி

    முத்தரப்புத் தொடரில் அடுத்த போட்டி 19ம் தேதி இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையே நடைபெறவுள்ளது.

    more
  • இலங்கைத் தமிழர் நிலை.. கம்பன் விழாவில் கண்கலங்கிய ரஜினி!

    சென்னை: சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார்.

    கம்பன் கழகம் சார்பில், 36-வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

    இறுதி நாளன்று, "கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுவை தர்மராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மோகன், மூத்த வக்கீல் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் பேசியதாவது:

    நானும் தமிழன்தான்... ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.

    ஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.

    அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்.... காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" என்றார்.

    இந்தப் பேச்சை மேடைக்கு முன்வரிசை இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.

    ஈழத் தமிழரின் சுதந்திரமற்ற நிலை பற்றிய அந்தப் பேச்சைக் கேட்டதும் கண்கலங்கினார் அவர். சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டார்

    more
  • காமன்வெல்த் போட்டிக்கான ஏ.ஆர்.ரஹ்மானின் தீம் பாடல் 'ஸ்வாகதம்'


    டெல்லி: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஸ்வாகதம் என்ற தீம் பாடலை, காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாலாக அமைச்சர்  குழு இறுதி செய்துள்ளது.

    இன்னும் பத்து நாட்களில் இந்த மைய நோக்குப் பாடல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து குழுவின் தலைவரான நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடலைஇறுதி செய்துள்ளோம். ஸ்வாகதம் என்ற அந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இறுதி வடிவம் கொடுத்து வருகிறார். இன்னும் பத்து நாட்களில் அது வெளியிடப்படும்.

    காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவின் கடைசியி்ல் இந்தப் பாடல் ஒலிக்கப்படும்.

    ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பாடலை, ஷியாம் பெனகல், பரத் பாலா ஆகியோருடனும், ரஹ்மானுடனும் விவாதித்து கடைசியில் அதை தேர்வு செய்தோம்.

    இந்தப் பாடல் மிக அருமையாக உள்ளது. சரியான செய்தியை சொல்லும் வகையில் உள்ளது என்றார்.
    பாடல் எப்படி உள்ளது என்று போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடியிடம் கேட்டபோது, எனக்குப் பாடல் பிடித்துள்ளது என்று மொட்டையாக பதிலளித்தார்.

    இந்த மையநோக்குப் பாடலை மகாத்மா காந்திக்கு அர்ப்பணிப்பதாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    more
  • 92 வயதில் உடல் தானம் செய்ய கடிதம் அளித்த நாகர்கோவில் பெரியவர்

    நாகர்கோவில்: 92 வயதாகும் குமரி மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த பெரியவர் குட்டி நாடார் தனது உடலை தானம் செய்வதாக நாகர்கோவில் அரசு  மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கடிதம் அளித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

    மார்த்தாண்டம் அருகே உள்ள ஊர் குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் குட்டி நாடார். 92 வயதான இவர் ஒரு பத்திர எழுத்தர் ஆவார். இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.

    நாடு 64வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக ஏதாவது செய்ய விரும்பினார் குட்டி நாடார். இதையடுத்து தனது உடலை தானமாக அளிக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற அவர் அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் ராமை சந்தித்து தனது உடலை தானமாக அளிக்க முன்வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பான ஒப்புதல் கடிதத்தையும் முதல்வரிடம் அவர் அளித்து விட்டுச் சென்றார்.

    92 வயதில் உடலைத் தானமாக வழங்குவதாக மருத்துவக் கல்லூரிக்கு நேரில் வந்து ஒப்புதல் கடிதம் அளித்த அந்தப் பெரியவரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

    more
  • ராணுவத்தில் சேர்ந்தவர்களிடம் போலி மதிப்பெண் சான்றிதழ்:போலி சான்றிதழ் தயாரித்த கும்பலின் தலைவன் கைது வேலூர்: ராணுவத்தில் சேர போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விநியோகித்து வந்த கும்பலின் தலைவன் வேலூர்  அருகே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    எங்கு பார்த்தாலும் போலிச் சான்றதழ் நடமாட்டம். இது ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை. ராணுவத்தில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 6 பேரின் மதிப்பெண் சான்றிதழ்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

    ராணுவத் தேர்வுக்கு வந்தவர்களின் சான்றிதழ்களை கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ராணுவ அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர். அப்போது அதில் சிலருடைய சான்றிதழ்கள் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ராணுவ அதிகாரிகள் புகார்  கொடுத்தனர்.

    அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி என்பவர் பிடிபட்டார். 5 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் கொடுத்தபோது அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

    அவரிடம் இருந்து ஏராளமான 10 மற்றும் 12-ம் வகுப்பு போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவரிடம் இருந்து 200க்கும் மேற்பட்டோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்று, ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் மணி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் போலீசார் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். மணியுடன் சேர்ந்து போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    more
  • உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு இ-மெயிலில் வந்த கம்ப்யூட்டர் வைரஸ் டெல்லி: உஸ்பெகிஸ்தானுக்கான இந்திய தூதரின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் விபரீதமான கணிணி வைரஸ் இருப்பதால் பாதுகாப்பு  பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    அந்த தூதரின் மெயில் பாக்சை குறும்பர்கள் யாரேனும் பயன்படுத்தி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    அந்த ட்ரோஜன் வைரஸ் அதிகாரிகளின் கணிணிகளில் பொருத்தப்பட்டுள்ள ட்ரென்ட் மைக்ரோ ஆன்டி வைரஸ் மென்பொருளையும் தாண்டி வந்துள்ளது.

    உள் துறை அமைச்சகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பலருக்கு வந்துள்ள மின்னஞ்சலில் இந்திய தீவிரவாதிகள்  பட்டியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ட்ரோஜன் வைரஸ் இருப்பது குறித்து புலன் ஆய்வுத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை தெரிவித்துள்ளது

    more
  • சமூக நீதி குறித்து கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் பேசக் கூடாது-ராமதாஸ்


    சென்னை: தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை. முதல்வர் கருணாநிதி  உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்கள் இது பற்றி பேசத் தகுதி இல்லை என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

    ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக தொடர் போராட்டங்கள் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸைப் பாராட்டி, அக்கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் ராமதாஸ் பேசியதாவது:

    இந்தக் கூட்டத்தை பாராட்டுக் கூட்டம் என்று கூறுவது சரியல்ல. தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுக்கும் கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.

    பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும்.

    எனவே, தமிழக அரசு தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும் இந்தக் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தியாக வேண்டும்.

    தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் [^] அண்மையில் ஒரு தீர்ப்பை கூறியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு தொடரலாம் என்றும், அடுத்த ஆண்டுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வளவு இடஒதுக்கீடு தேவை என்பதை தீர்மானிக்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    அதாவது, ஒருவேளை பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை 85 சதவீதமாக இருக்குமானால், அந்த அளவுக்கு இடஒதுக்கீட்டை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்ப்பு.

    நாடு சுதந்திரம் பெற்ற பின், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. தீர்ப்பு வந்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யாதது ஏன்?

    ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இப்போது மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பல மாநிலங்களுக்கு சென்று, ஆதரவை திரட்டி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது பா.ம.க.தான். தமிழகத்தில் எந்த கட்சியாவது இதற்காக குரல் கொடுத்தது உண்டா?

    முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து மாநில எம்.பி.க்களிடமும் பா.ம.க. கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியது. 174 எம்.பி.க்களின் கையழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சென்று அப்போதைய உள்துறை அமைச்சரிடம் அளித்தார் பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி. அந்த மனுவில் பா.ம.க.வைத் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து போட மறுத்து விட்டனர்.

    பல ஆண்டுகளாக தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு ஒரே தொகுப்பாகத்தான் வழங்கப்பட்டு வந்தது. வன்னியர் சங்கம் தொடங்கி, பெரும் போராட்டங்களை நடத்தி, 30 உயிர்களை பலி கொடுத்த பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

    இப்போது தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதும் பா.ம.க. மட்டுமே. இவ்வாறு தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை.

    ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும். இல்லையெனில், மாநில அரசுக்கு எதிராக பா.ம.க. பெரும் போராட்டத்தில் ஈடுபடும். இதற்காக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்கு தொடர்ந்ததைப் போல என் மீது வழக்கு தொடர்ந்தாலும், அதைச் சந்திக்கத் தயார் என்றார் ராமதாஸ்.

    more
  • கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-அகதி அந்தஸ்து வழங்க இலங்கை அரசு எதிர்ப்பு டொரண்டோ: கப்பல் மூலமாக கனடாவைச் சென்றடைந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்  அகதி அந்தஸ்து கோரி புகலிம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கனடா அரசு அகதிகள் அந்தஸ்தை அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசு தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    “சன் சீ” என்ற கப்பலில் 350 ஈழத் தமிழர்கள் கனடா புறப்பட்டுச் சென்றனர். அவர்களை அகதிகளாக பாவித்து உதவ கனடா அரசு முன் வந்துள்ளது. இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு  தெரிவித்துள்ளது.

    கனடாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சித்திராவ்கனி கனடா அரசிற்கு இது தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    கப்பல் மூலம் கனடா வந்துள்ளவர்களில் பலர் விடுதலைப்புலிகள்  ஆவர். இந்த கூட்டத்திற்கு தலைவராக உள்ள வினோத் விடுதலைப் புலிகளின் தலைவர் ஆவார். மேலும், அவருக்கு ஆயுதகடத்தலிலும் தொடர்பு உள்ளது.

    எனவே, கனடா அரசு இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கக்கூடாது என்று அவர் அதில் கூறியுள்ளார்.

    ஆனால் இலங்கை அரசின் இந்த குற்றச்சாட்டை ஏற்க கனடா அரசு மறுத்துவிட்டது. கப்பலில் வந்திருப்பவர்களைப் பார்த்தால் அப்பாவிகளாக இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் அகதிகள் தான் என்று கனடா எல்லை பாதுகாப்பு  அதிகாரி தெரிவித்தார்.

    more
  • சுதந்திர தினத்தில் நிதி உதவி செய்து கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்!

    இந்தியாவின் 64வது சுதந்திர தினத்தை ரசிகர்களுடன் கொடியேற்றி வைத்துக் கொண்டாடினார் நடிகர் கமல் ஹாஸன்.

    ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுவது கமல்ஹாஸன் வழக்கம்.

    இந்த ஆண்டும் இந்தியாவின் 64 சுதந்திர தினத்தை கொடியேற்றிக் கொண்டாடினார்.

    இந்த நாளில் ஏழைப் பெண்களுக்கு புடவைகள், ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் என ஏராளமான உதவிகளை வழங்கினார்கள் அவரது ரசிகர்கள் .

    இதற்கான நிதியை கமல்ஹாஸன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கினார்கள்.

    கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரசிகர்கள் மாணவர் நாப்கின் இயந்திரத்தை வழங்கினர். கர்நாடக ரசிகர்கள் குளிர்பதனப் பெட்டியையும், பாண்டிச்சேரி ரசிகர்கள் இரு ஏழைகளுக்கு தலா ரூ 15000 உதவித் தொகையும் வழங்கினார்கள்.

    வட சென்னை ரசிகர்கள் இரு மாணவர்களுக்கு தலா ரூ 10000 வழங்கினர். ராசிபுரம் ரசிகர்கள் 330 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினர்.

    ஜாஸ்மின் என்ற மாணவியின் மேற்படிப்புக்கு ரூ 10000 வழங்கினர் திருநெல்வேலி  ரசிகர்கள்.

    காது கேளாதோர் பள்ளியில் தண்ணீர் தொட்டி அமைக்க புதுக்கோட்டை ரசிகர்கள் ரூ 5000 வழங்கினர். கிழக்கு காஞ்சிபுரம் ரசிகர்கள் இலவச தையல் எந்திரம் மற்றும் புடவைகள் வழங்கினர்.

    more
  • பொன்னர் சங்கர்.... வாங்கினார் மார்ட்டின்!


    பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை வாங்கினார் பிரபல லாட்டரி வர்த்தகரான மார்ட்டின்.

    அவரது மார்ட்டின் புரொடக்ஷன் ஏற்கெனவே முதல்வர கதை வசனத்தில் உருவாகும் இளைஞன் படத்தைத் தயாரித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரசாந்த் நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் மற்றொரு பிரமாண்ட வரலாற்றுப் படமான பொன்னர் சங்கரையும் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை தியாகராஜனே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    பொன்னர் சங்கர் படத்தில் ராஜ்கிரண், சினேகா, குஷ்பு, சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், மற்றும் ஜெயராம் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது

    more
  • மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த கருணாநிதி எதிர்ப்பு

    சென்னை: அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங் , சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் முதல்வர் கூறியிருப்பதாவது:

    "2011-12-ம் கல்வி ஆண்டு முதல் அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்) மாணவர்கள்  சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு வந்தபோது மத்திய அரசு  தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.

    தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தொழில் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை 2007-08-ம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், சமூக-பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பலன் அடைந்து வருகின்றனர். அத்துடன் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் விரும்பி பணியாற்றும் நிலை விரைவில் ஏற்படும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

    மாநில உரிமையில் குறுக்கீடு: மத்திய அரசு அறிவித்துள்ள அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த முறை காரணமாக மருத்துவம்-முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் ஒரு குழப்ப நிலை உருவாகும் என்றும் அஞ்சப்படுகிறது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை தமிழக அரசு பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இப்போது மத்திய அரசு தெரிவித்துள்ள புதிய முறையினால், இந்த இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

    சமூகநீதி கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் மாநிலம் தமிழகம் என்பதால், மேல் குறிப்பிட்ட வகுப்பினரை நுழைவுத் தேர்வு முறை பாதிக்கும். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    எனவே தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    more
  • ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகைப் பொருள் பாக்கெட் விலை குறைப்பு சென்னை: ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரசு வழங்கும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட் விலை ரூ. 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அளவையும் குறைத்து விட்டனர்.

    ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் 10 மளிகைப் பொருட்களைக் கொண்ட பாக்கெட்டை அரசு ரூ. 50க்கு வழங்கி வருகிறது. இதில் கடுகு, மிளகு, சீரகம் உள்பட 10 பொருட்கள் இடம் பெற்றிருக்கும். மக்கள்  மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது இதன் விலை மற்றும் அளவை குறைத்துள்ளனர்.
    .
    அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்துக்கு, மானிய விலையில் வழங்கப்படும் 10 மளிகைப் பொருள்கள் உள்ள பாக்கெட்டின் விலை ரூ. 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சொன்னதைச் செய்வோம் சொல்வதைச் செய்வோம் என்ற வாசகங்களுடன் முதல்வர்  கருணாநிதியின் படத்துடன் கூடிய இந்த பாக்கெட்களில், ஒரு பெண்  அஞ்சறைப் பெட்டியில் இருந்து மளிகைப் பொருள்களை எடுத்து வாணலியில் சமைப்பது போன்ற வண்ணப் படத்துடன் பத்துப் பொருள்கள் ரூ. 25 என்று பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது.

    விலை குறைந்ததே என்று மக்கள் மகிழ்ந்தாலும், உள்ளே உள்ள பொருட்களின் அளவும் குறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.

    இந்த மளிகைப் பொருட்களின் புதிய அளவும், பழைய அளவும் (அடைப்புக்குறிக்குள்):

    (அனைத்தும் கிராம்களில்)

    மிளகாய் தூள் 100 (250)
    மல்லித்தூள் 50 (250)
    கடலைப் பருப்பு 50 (75)
    உளுத்தம்பருப்பு 25 (50)
    மஞ்சள் தூள் 50 (50)
    வெந்தயம் 25 (25)
    கடுகு 25 (25)
    மிளகு 25 (25)
    சீரகம் 50 (50)
    கரம் மசாலா தூள் 10 (10)

    மஞ்சள் தூள், வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம், கரம் மசாலா தூள் ஆகியவற்றின் அளவு குறைக்கப்படவில்லை. மற்ற 4 பொருட்களின் அளவையும் குறைத்து விட்டனர்.

    more
  • கேரள கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன கொல்லம்: கேரளாவில் கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையிலான கடல் பகுதி நேற்று மதியம் திடீரென இருட்டானது. பல இடங்களில் கடல் கொந்தளித்து 15 அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்ந்தன. அதில் சிறுவன் பலியானதாகத் தெரிகிறது. இதனால் கடலில் படகு ஒன்றும் கவிழ்ந்தது.

    கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள்  நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மதியம் 2 மணி அளவில் கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையிலான தென்கேரள கடல் பகுதியில் திடீரென இருட்டு பரவியது. இரவு போல் கும்மிருட்டு பரவியதால் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பீதி அடைந்தனர். அந்த நேரத்தில் கடலும் கடுமையாக கொந்தளித்தது. இதனால் மீனவர்கள் கரைக்கு வேகமாகத் திரும்பினர்.

    இதற்கிடையே பூந்துறை மீனவ கிராமத்தில திடீரென அலைகள் 15 அடி உயரத்திற்கு எழுந்தன. இதில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை அலை இழுத்துச் சென்றது. அவனைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. கொல்லம் அழிக்கால் பகுதியில் கடலில் ஏற்பட்ட திடீர் சூறாவளியால் ஒரு படகு கவிழ்ந்து 17 மீனவர்கள் காயம்  அடைந்துள்ளனர். 1 மீனவர் பலியானதாக அஞ்சப்படுகிறது. கடலில் ஏற்பட்ட திடீர் இருட்டு காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேரள அரசு  அறிவுறுத்தி உள்ளது

    more
  • தமிழக திட்டங்கள் தொடர்பான ஆலோசனை-திமுக,அதிமுக பங்கேற்பு டெல்லி: தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சிகளின் எம்.பிக்களும் கலந்து கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

    தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து எம்.பி.,க்களின் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில் முதன்முறையாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்  மார்க்சிஸ்ட் கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    டெல்லியில் உள்ள இந்திய ஹேபிடேட் சென்டரில் இந்த கூட்டம் நடைபெற்றது. கனிமொழி தலைமையில் தி.மு.க. எம்.பி.,க்களும், தம்பிதுரை சார்பில் அ.தி.மு.க. எம்.பி.,க்களும், தமிழக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர். எதிரும் புதிருமாக உள்ள திமுக, அதிமுக எம்.பிக்கள் ஒற்றுமையாக கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது.

    தம்பித்துரை பேசுகையில், கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள் தங்களது மாநில பிரச்னை என்றால் ஒற்றுமை காட்டுகின்றனர். அதுபோல முதன்முறையாக தமிழக எம்.பி. க்கள் அனைவரும் ஒற்றுமை காட்டுவது வரவேற்கத்தக்கது. நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளோம். தி.மு.க.விலும் எம்.பி.க்கள் நினைத்தாலும் கூட முடியாது. நல்ல இலாகாக்கள் இருந்தால் மட்டுமே மத்திய அரசிடமிருந்து திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

    கனிமொழி பேசுகையில், இதுபோன்ற முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, டில்லியிலேயே ஒரு அலுவலகம் கூட திறக்கலாம். தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து என்ன மாதிரியான உதவிகள் வேண்டுமென்றாலும் எம்.பி.,க்களாகிய நாங்கள் முடிந்த வரை உதவி செய்ய தயார்' என்றார்.

    கம்யூனிஸ்ட் கட்சியின் ராமசுப்பு பேசுகையில், தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதுரை - தூத்துக்குடி இரட்டைப் பாதை மற்றும் விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டைப் பாதை ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    பின் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை தொழில் கூட்டமைப்பினர் எம்.பிக்களுக்கு விளக்கினர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரிய முறையில் எழுப்பி ஆவண செய்வதாக எம்.பிக்கள் உறுதியளித்தனர்.

    more
  • கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

    சென்னை: நீண்ட கால தொலைநோக்குடன் கூடிய, மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நிரந்தர வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். தமிழக முதல்வர் கருணாநிதி போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரிடம் இருந்து இத்தகைய இலவசத் திட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் மூத்த பாஜக தலைவரான வெங்கையா நாயுடு.

    வெங்கய்ய நாயுடு எழுதிய டயர்லஸ் வாய்ஸ் ரெலண்ட்லஸ் ஜார்னி என்ற நூல், ஓயாத குரல், ஓய்வில்லாத பயணம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆந்திரா கிளப்பில் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு வெங்கையா பேசுகையில், நீண்ட கால தொலைநோக்குடன் கூடிய, மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நிரந்தர வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். தமிழக முதல்வர் கருணாநிதி போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரிடம் இருந்து இத்தகைய இலவசத் திட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை.

    குடிநீர், தடையற்ற மின் விநியோகம், கிராமப்புறங்களுக்கு சாலை வசதி, சுகாதாரம், தொடக்கக் கல்வி, முறையான பாசன வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். வறுமையில் வாடும் மக்களின் நலன் கருதி, ரேஷன் அரிசி விநியோகத்துக்காக, மானிய உதவி வழங்கப்படுகிறது.

    அரசிடம் போதிய நிதி வசதி இருக்கும்பட்சத்தில் முதலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    இதன்பின்னரே, இலவச கலர் டிவி மற்றும் அனைவருக்கும் கூடுதல் டிவி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் ஆதாயம் கருதி இத்தகைய இலவச திட்டங்களை நிறைவேற்றும் போக்கு, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசிடம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே மனப்பான்மையும், போக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே வளர்ந்து வருகிறது. இது மிகுந்த கண்டனத்துக்குரியது.

    பொதுவாக மக்கள் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் திட்டங்களை அரசியல் பாகுபாடின்றி ஒருமித்து நிறைவேற்ற கட்சிகள் இயல்பாக முன்வர வேண்டும். இதே போல குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.

    இதுவே, கட்சிகளின் செயல் திட்டமாக இருக்க வேண்டும். மக்கள் நலன் என்பது ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை மானிய விலையில் வழங்குவதாகும். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அரசியல் பாகுபாடு, கருத்து வேறுபாடுகளை மறந்து மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    more
  • ‘நடுநிசி நாய்கள்’ என்று பெயர் வைத்தது தப்பா?
    டைரக்டர் கவுதம் மேனன்.அளித்த பேட்டி: என் படங்களுக்கு பெயர் வைக்கும்போது சர்ச்சை எழுகிறது. எந்த படத்தையும் சினிமா துறைக்காக எடுக்கவில்லை. ரசிகர்களுக்காக எடுக்கிறேன். தலைப்பு வைப்பது என் இஷ்டம். அதன் வெற்றி, தோல்விக்கு பொறுப்பு ஏற்பது நான்தான். தற்போது இயக்கிவரும் படத்துக்கு ‘நடுநிசி நாய்கள்’ என்று டைட்டில் வைத்ததற்கு அதிருப்தி தெரிவிக்கிறார்கள். இரவு நேரத்தின் ஆபத்தை உணர்த்தும் வகையில் இந்த தலைப்பு வைத்தேன்.

    ஹாரிஸ் ஜெயராஜ் எனது படங்களுக்கு இசை அமைத்து வந்தார். இப்போது ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்திருக்கிறேன். இதற்கு ஹாரிஸை ஒதுக்கிவிட்டேன் என்று அர்த்தமில்லை. இசையுலகில் ரகுமான் திறமையானவர். அவர் வியக்கத்தக்க மனிதர். ‘அஜீத் படம் இயக்குவீர்களா?’ என்கிறார்கள். அவரிடம் ஒரு வரி கதையை கூறினேன். ஸ்கிரிப்ட் தயாரிக்கச் சொன்னார். ஜூலையில் படத்தை தொடங்கலாம் என்றார். பிறகு டிசம்பர் மாதத்துக்கு கால்ஷீட் தள்ளித் தருவதாக கூறினார். இதற்கிடையில் நான் வேறு படங்களை ஒப்புக் கொண்டுவிட்டேன். கமலுடன் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இணைந்தேன். அவரை பெரிதும் மதிக்கிறேன். அவர் கால்ஷீட்டுக்காக எத்தனை காலமானாலும் காத்திருப்பேன். ‘காக்க காக்க’ ஹிட்டுக்கு பிறகு ரஜினியிடம் ஒரு கதை கூறினேன். அவருடன் பணியாற்ற கனவுகளோடு காத்திருக்கிறேன்.

    தமிழில் வெற்றி பெற்ற ‘விண்ணை தாண்டி வருவாயா’வை இந்தியில் இயக்குகிறேன். ‘காக்க காக்க’ இந்தியில் ஜான் ஆப்ரகாம் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவராக தோன்றவில்லை. எந்த மொழியில் தயாரித்தாலும் குறிப்பிட்ட போலீஸ் கதாபாத்திரத்தை சூர்யா ஒருவரால் மட்டுமே நன்றாக செய்ய முடியும் என்பது என் கருத்து. இவ்வாறு கவுதம் மேனன் கூறினார்.

    more
  • 400 மாடுகளுக்கு மத்தியில் ஆதி சண்டை


    குளோபல் இன்போடெய்ன்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படம், ‘ஆடு புலி’. ஆதி, பூர்ணா, பிரபு, ரவிச்சந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ராஜவேல் ஒளிவீரன். சுந்தர் சி.பாபு இசையில் வாலி, விவேகா, யுகபாரதி, கலைக்குமார் பாடல்கள் எழுதுகின்றனர். விஜய் பிரகாஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

    டைரக்டர்கள் கே.பாக்யராஜ், பூரி ஜெகன்நாத், ஒய்.பி.சவுத்ரியிடம் பணியாற்றினேன். இப்போது இந்தப் படத்தை இயக்குகிறேன். ஷிவ் யாதவ் அமைத்த 8 அரங்குகளில், முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. எண்ணூர் துறைமுகம் அருகில், இரும்புத்தாது கலந்த மணற்பரப்பில், ஆங்கில படங்களுக்கு நிகரான கார் சேஸிங் காட்சியை 5 நாட்கள் படமாக்கினோம். மேலும், மாபெரும் மாட்டுக்கொட்டகை அரங்கு அமைத்து, 400 மாடுகளுக்கு மத்தியில் வில்லன் அடியாட்களுடன் ஆதி மோதிய சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. திலீப் சுப்பராயன் பயிற்சி அளித்தார். இக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும்.

    more
  • விக்ரமுக்கு நோ சொன்ன வித்யா பாலன்!

    விக்ரம் ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் பிரபல இந்தி நடிகை வித்யா பாலன்.

    பா, இஷ்கியா என வெற்றிப் படங்களில் நடித்துள்ள வித்யா பாலனை எப்படியாவது தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் பல இயக்குநர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை வித்யா.

    இந்நிலையில் சமீபத்தில் அவரைச் சந்தித்தார் மதராஸப்பட்டணம் படத்தை இயக்கிய விஜய். விக்ரமை வைத்து தான் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    ஆனால் கதையைக் கேட்கக் கூடத் தயாராக இல்லையாம் வித்யா பாலன்.

    "எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை. எனவேதான் கதை கூட கேட்கவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்கு நான் எந்த மொழிப் படங்களிலும் நடிப்பதாக இல்லை. 'நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிகா' படம் வெளியான பிறகுதான் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாவேன்" என்றார்.

    more
  • ராஜாவுடன் கைகோர்க்கும் கவுதம் மேனன்!

    கவுதம் மேனன் தயாரிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இசைஞானியும் கவுதம் மேனனும் இணைவது இதுவே முதல் முறை.

    பல முறை தன்னை இளையராஜாவின் ரசிகன் என்று கூறி வந்தார் கவுதம் மேனன். ஆனால் அவர் இதுவரை ஒரு படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றியதில்லை. இந்த நிலையில் கவுதம் மேனனின் சொந்தப் பட நிறுவனமான ஃபோட்டான் ஃபேக்டரி 'அழகர்சாமியின் குதிரை' என்ற படத்தைத் தயாரிக்கிறது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

    இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் படம் இது. படத்தின் ஒரு முக்கிய பாத்திரமாகவே இசை பயணிப்பதால், இதற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என கவுதம் மேனன் கேட்டுக் கொள்ள, இசைஞானியும் சம்மதித்துள்ளார். இதன்மூலம் இளையராஜா-கவுதம் மேனன்-சுசீந்திரன் என புதுக்கூட்டணி உருவாகியுள்ளது.

    பாஸ்கர்சக்தி எழுதிய நாவலைத்தான் அழகர்சாமியின் குதிரை என படமாக எடுக்கிறார்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் நாயகியாக நடித்த சரண்யா மோகன்தான் இதிலும் நாயகி. அந்தப் படத்தில் கபடி விளையாட்டி வீரராக நடித்த இளைஞரை முதல் முறையாக ஹீரோவாக்கியுள்ளார் சுசீந்திரன்.

    நிகில் முருகன் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.

    more
  • ரோபோ இந்தி இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் - ஷாரூக்!

    சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள மெகா பட்ஜெட் படமான எந்திரனின் இந்திப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது.

    வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப் பச்சன், ஷாரூக்கான் மற்றும் அமீர் கான் பங்கேற்கிறார்கள்.

    இவர்களுடன் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் பங்கு பெறுகின்றனர்.

    இதுகுறித்து சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கூறியிருப்பதாவது:

    ரோபோ இந்திப் படத்தின் இசை வெளியீடு மிகப் பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது. அமிதாப் மற்றும் ஷாரூக்கான் இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்பதாகக் கூறிவிட்டனர். அமீர்கானும் தனது உடல்நிலை அனுமதித்தால் வருவதாகக் கூறியுள்ளார்.

    மும்பை மேர்ரியட் ஓட்டலில் இந்த விழாவை அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன," என்றார்.

    இந்தப் படத்தில் ஷாரூக்கான்தான் நடிக்கவிருந்தார். ஆனால் ஷங்கருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் படம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோபோ என்ற பெயர் வரும் 8 தலைப்புகளை ஷாரூக்கான் பதிவு செய்து, சிக்கலை ஏற்படுத்தினார். ஆனாலும் ஷங்கர் முன்பே ரோபோ என்ற பெயரைப் பதிவு செய்திருந்ததால், ஷாரூக்கின் தந்திரம் பற்றி கவலைப்படவில்லை.

    more
  • குறைந்த முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு ரூ 18 லட்சம் மானியம்! தமிழில் குறைந்த முதலீட்டில் படங்கள் தயாரித்த 9 தயாரிப்பாளர்களுக்கு ரூ 18 லட்சத்தை மானியமாக வழங்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

    இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

    "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

    அதில், குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் நேரடி தமிழ் படங்களுக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து ரூ.2 லட்சம் மானிய தொகை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. சங்க விதிகளுக்கு உட்பட்டு வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

    நாள் நட்சத்திரம், இரு நதிகள், வேடப்பன், பூச்சி, கரகம், வைதேகி, ஆடாத ஆட்டமெல்லாம், தமிழகம், உன்னை கண் தேடுதே ஆகிய 9 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்தப் படங்களை தயாரித்த பட அதிபர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.18 லட்சத்தை சங்க தலைவர் ராம.நாராயணன் வழங்கினார்.

    மேலும், பொதுக்குழுவில் எடுத்த தீர்மானத்தின்படி கியூப், யூ.எப்.ஓ. விலை நிர்ணயம் குறித்து வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு, பிலிம்சேம்பர் வளாகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில், அனைத்து தயாரிப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்..."

    -இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

    நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், துணைத்தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, பிலிம்சேம்பர் பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலு, ஏ.என்.பவித்ரன், ஆனந்தி வி.நடராஜன், விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

    more
  • மும்பை துறைமுக பணி நேற்று மீண்டும் துவங்கியது
    மும்பை: கடந்த வாரம் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, மூடப்பட்ட மும்பை துறைமுகம், நேற்று மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

    கடந்த 7ம் தேதி மும்பைக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் பனாமா நாட்டை சேர்ந்த சித்ரா என்ற சரக்கு கப்பலும், கலீஜியா என்ற கப்பலும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால், சித்ரா கப்பல் சேதமடைந்து ஒரு பக்கமாக சாய்ந்தது. இந்த கப்பலில் இருந்த ஆயிரத்து 219 கன்டெய்னர்களில் 300 பெட்டகங்கள் கடலில் மூழ்கின. அதுமட்டுமல்லாது இந்த கப்பலில் இருந்த 2,662 டன் கச்சா எண்ணெயில், 500 டன் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் பரவியது. இதனால், மும்பை அருகே இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் பரவியது.

    கடலில் மூழ்கிய சரக்கு பெட்டகங்களில் பாஸ்பரஸ், சோடியம் ஹைட்ரோகுளோரைடு, பைரிதிராய்ட் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள், கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு பெருத்த கேடு விளைவித்துள்ளன. இச்சம்பவங்களால் கடந்த ஐந்து நாட்களாக இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மும்பைக்குள் வரமுடியாமல் 12 கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. ஐந்து நாட்களுக்கு பிறகு மும்பை துறைமுகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடலோர காவல் படை உதவியுடன் கப்பல்கள் போக்குவரத்து துவங்கியது.

    more
  • ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம்

    டெல்லி: போபால் விஷ வாயு சம்பவத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவில் இருந்து தப்பவிட்டது யார் என்பதை அறிந்து கொள்ள எந்தவித ஆவணமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    ஆண்டர்சனை அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ்தான் தப்ப விட்டதாகவும், அதற்கும் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் ராஜ்யசபாவில் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து ராஜ்யசபாவில் சிதம்பரம் கூறியதாவது:

    ஆண்டர்சன் பாதுகாப்பாக அமெரிக்கா செல்ல வழி வகை செய்யப்பட்டதாக அப்போதைய வெளியுறவுத் துறை செயலராக இருந்த எம்.கே.ரஸ்கோத்ரா கூறியுள்ளார். அர்ஜுன் சிங்கும் அதையே கூறியுள்ளார். அவர்களது கூற்றை உறுதி செய்யவோ, மறுக்கவோ கூடிய நிலையில் நான் இல்லை.
    காரணம், ஆண்டர்சன் தப்பிச் செல்வதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொலைபேசி மூலம் மாநில அரசுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள் என்பதற்கும், அவர் பாதுகாப்பாக செல்வதற்கு உறுதி அளிக்கப்பட்டது என்பதற்கும் எந்த ஆவணமும் இல்லை.

    ராஜீவ் காந்திக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என அர்ஜுன் சிங் கூறியுள்ளதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆண்டர்சன் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியிருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதை நெருக்குதல் என்றோ அல்லது அவர்களது கடமை என்றோ விவரிக்கலாம்.

    நமது தவறுகளுக்கு அமெரிக்காவை நாம் ஏன் குறை கூற வேண்டும்?.

    எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இப்போது கேட்கும் கேள்விகளை 2001ல் அவர் சட்டத் துறை அமைச்சராக இருந்தபோது கேட்டிருந்தால், என்னைவிட திறமையான உள்துறை அமைச்சர் (எல்.கே.அத்வானி) அதற்கான ஆவணங்களைத் தேடி கண்டுபிடித்து பதில் கூறியிருந்திருப்பார்.

    அதைவிட்டுவிட்டு இப்போது எங்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

    கடந்த 25 ஆண்டுகளாக நாம் பல தவறுகளை செய்துள்ளோம். நாடாளுமன்றம், அதிகாரிகள், அரசியல்வர்க்கம் ஆகியவை பாதிக்கப்பட்டோரை கைவிட்டுவிட்டன. நீதிமன்றத்தின் பின்னால் நாம் ஒளிந்து கொள்ளலாம் என நாடாளுமன்றமும், அதிகாரவர்க்கமும் நினைத்துவிட்டன.

    போபால் விஷவாயு நஷ்டஈடு வழக்குகள் தொடர்பாக 1989 மற்றும் 1991க்கு இடையிலும், கிரிமினல் வழக்குகள் தொடர்பாக 1989 மற்றும் 1996க்கு இடையிலும் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த காலகட்டத்தில் 3 பேர் பிரதமர்களாக (வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ்) இருந்தனர்.

    இவர்கள் மூவருமே ஏதாவது ஒரு வகையில் இந்தப் பிரச்சனையை சரியாக கையாளாததற்கு பொறுப்பாவார்கள்.

    ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் இந்திய கிளைகளை எவரெடி நிறுவனம் வாங்கிவிட்டது. சர்வதேச சொத்துகள் டெல் நிறுவனம் வாங்கிவிட்டது.

    இந்த சம்பவத்துக்கு பொறுப்பாளி யார் என்பது குறித்த வழக்கு 2005 முதல் ஜபல்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பொறுப்பாளி யார் என்பது முடிவானவுடன் நஷ்டஈட்டை நாம் கோர முடியும் என்றார் ப.சிதம்பரம்.

    more
  • நக்சல்கள் மீது தாக்குதல் நடத்த விமானப்படைக்கு அனுமதி
    புதுடில்லி : நக்சலைட்கள் தாக்கும் பட்சத்தில், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, இந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நக்சலைட் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் அவர்களை ஒடுக்க, விமானப்படை விமானங்களை பயன்படுத்த வேண்டும் என, விமானப்படை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக பார்லிமென்டிலும் விவாதங்கள் நடைபெற்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர் என, பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்திருந்தார். தற்காப்புக்காக நக்சலைட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பட்சத்தில், அதற்காக சிறப்பு அனுமதி பெற தேவையில்லை என, ராணுவ அமைச்சர் அந்தோணியும், கடந்த நவம்பரில் நடந்த பார்லி கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நக்சல் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ராணுவத்தினர் மீது, நக்சலைட்கள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், தற்காப்பு கருதி, ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, விமானப்படைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நக்சலைட்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையில், மிகவும் கடுமையான ஆயுதங்களை உபயோகிக்கக் கூடாது; அவற்றை, விமானப்படை கமாண்டோக்கள் தான் பிரயோகிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    more
  • வண்டலூர் பூங்காவில் 3 சிங்க குட்டிகள் அடுத்தடுத்து சாவு

    சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கத்துக்குப் பிறந்த 3 குட்டிகளும் அடுத்தடுத்து இறந்துவிட்டன.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கவிதா என்ற சிங்கத்துக்கு கடந்த ஜூன் 30ம் தேதி 3 குட்டிகள் பிறந்தன.

    இதில் ஒரு குட்டி அன்றே இறந்து விட்டது. மற்ற 2 குட்டிகளும் சோர்வாகவே காணப்பட்டன. இதில் அடுத்த ஒரு வாரத்திலேயே இன்னொரு குட்டியும் இறந்துவிட்டது.

    இந் நிலையில் நேற்று 3வது குட்டியும் இறந்து விட்டது.

    இந்த இரு குட்டிகளும் மிக பலவீனமாக இருந்ததோடு பால் குடிக்காமலும் இருந்துள்ளன. இதனால் அவரை இறந்ததாகத் தெரிகிறது

    more
  • ராஜபக்சே குரல் போல ஒலிக்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவை நீக்க வேண்டும்-பழ.நெடுமாறன்
    சென்னை: தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியாது என பகிரங்கமா கூறியுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜபக்சேவின் குரல் போல ஒலிக்கிறார். அவரை உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்திட வேண்டும், அதற்காக இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்துள்ள பதில்கள் தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்பகுதிக்கு எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் அவர்களை அறியாமல் எல்லைத் தாண்டிச் செல்வதுண்டு ஆனால் அவர்களையெல்லாம் யாரும் சுட்டுக்கொல்வதில்லை. குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடலில் நுழைந்து விட்டால் அவர்கள் சுடப்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் வைக்கிறது. மேற்கு வங்க மீனவர்கள் வங்கதேச எல்லைக்குள் புகுந்துவிட்டால் அவர்களை வங்க தேசக் கடற்படை கைது செய்கிறதே தவிர சுடுவதில்லை. ஏன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சிங்கள மீனவர்களை இந்திய கடற்படை இதுவரை சுட்டதேயில்லை.

    1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆண்டு காலமாக சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடலுறுப்புகளை இழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

    நமது கடல் எல்லைக்குள்ளாகவே இவ்வளவும் நடைபெறுகிறது. ராமேசுவரத்திற்கு அருகேயுள்ள வாழைக்குடா என்ற தமிழகச் சிற்றூரில் சிங்களக் கடற்படை வந்திறங்கி அங்குள்ள மீனவர்களை சுட்டும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் அட்டூழியம் செய்துவிட்டுத் திரும்பியது. இந்தியக் கடற்படை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்குச் சர்வதேச சட்டங்களின்படி நட்ட ஈட்டினை சிங்கள அரசிடம் பெற்றுத்தர இதுவரை எந்த முயற்சியும் இந்திய அரசு செய்ததில்லை.

    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராசபக்சேயின் குரலில் பேசுகிறார். இவரைப் போன்றவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும்வரை தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய குடிமக்களுக்கே எத்தகையப் பாதுகாப்பும் ஒருபோதும் இருக்காது.

    சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

    more
  • தமிழக மீனவர்களை இலங்கை தாக்குதலிலிருந்து காப்பாற்றாவிட்டால் பெரும் போராட்டம்-நாம் தமிழர்

    சென்னை: இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை காப்பாற்றாவிட்டால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூத்தன் விடுத்துள்ள அறிக்கை:

    பல கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை அரசுக்கு ஈட்டிக் கொடுக்கும் எம் மீனவச் சொந்தங்களை கண்ணீரில் மிதக்க விட்டுள்ளது மத்திய, மாநில அரசுகள். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்னும் நம்பிக்கையளிக்கும் எந்த முடிவையும் எடுக்கவில்லை மத்திய மாநில அரசுகள்.

    தமிழக மீனவர்களின் கடல் மீதான தொழில் உரிமையை பாதுக்காக்கக் கோரி பேசிய குற்றத்திற்காக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரான செந்தமிழன் சீமானை சிறையிலடைத்திருக்கிறது மாநில அரசு. சீமான் சிறை சென்ற இந்தக் ஒரு மாத காலக்கட்டத்தில் கூட பல மீனவர்களைத் தாக்கியும் படகுகளை வெடிவைத்துத் தகர்த்தும் அராஜக வெறியாட்டத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது சிங்கள அரசு.

    எமது ரத்த சொந்தங்களான மீனவ மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் மீனவனுக்காகப் பேசுகிறவர்களின் வாயை அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு அடக்கி வருகிறது தமிழக அரசு.

    சுமார் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகளும் ஆயிரமாயிரம் கட்டுமரங்களும் கொண்டு தொழில் செய்து வந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று தொழில் செய்யவே அஞ்சி நடுங்கும் சூழல் உருவாகிவிட்டது. ராமேஸ்வரத்தில் மட்டுமல்லாமல் நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என்று இந்த அச்சம் அனைத்து தென் மாவட்ட மீனவர்களிடமும் பரவிக் கிடக்கிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் இருந்து எழும் நெருக்கடிகள் காரணமாக தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மீனவ மக்கள் மீது பாய்ந்துள்ளது.

    எல்லை தாண்டும் மீனவர்களை பாதுகாக்க முடியாது என்றும், இலங்கை செல்லும் போது மீனவர் பிரச்சனை தொடர்பாகப் பேசப் போவதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெர்வித்துள்ளதார்.

    ஒரு பக்கம் மீனவர் தாக்குதலை தடுத்து நிறுத்த முன்வராத கிருஷ்ணா, அவர்களை எல்லை தாண்டும் குற்றவாளிகளாகச் சித்தரித்திருக்கிறார். அதிகப் பணத்திற்கு ஆசைப்பட்டு எல்லை தாண்டுகிறார்கள் என்று கூட எம் மீனவ மக்கள் மீது ரக்கமற்ற குற்றச்சாட்டைச் சொன்னவர்கள்தான் இவர்கள்.

    இவர்களின் இப்படியான பேச்சுக்கள் தமிழக மீனவர்களைக் கொல்லும் சிங்களக் கடற்படைக்கு மேலும் மேலும் தைரியமூட்டுவதாக அமைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்கும். பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும், மேற்கு வங்க மீனவர்கள் வங்கதேச கடல் எல்லைக்குள்ளும் வங்கதேச மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் பிரவேசிக்கிற போது எதிரி நாடுகள் என்று சொல்லும் எந்த நாடுகளும் அந்த மீனவர்களைச் சுட்டுக் கொல்வதில்லை.

    பரஸ்பரம் இரு நாட்டு தூதரகங்களும் பேசி மீனவர்களை மீட்கிறது. ஆனால் இராமேஸ்வரம மீனவர்கள் உள்ளிட்ட தமிழக மீனவர்களை மட்டும்தான் நட்பு நாடு என்று இவர்கள் சொல்லிக்கொள்ளும் இலங்கை அரசு சுட்டுக் கொல்கிறது.

    மிகப்பெரிய போர்க்குற்றத்தைப் புரிந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபட்சே அரசு இப்போது அறிவிக்கப்படாத போர் ஒன்றைத் தமிழக மீனவர்கள் மீது நடத்திக் கொண்டிருக்கிறது. இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    வெறுப்பும் நம்பிக்கையும் அற்றுப் போகும் என்றால் அதன் எதிர்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்பது உலகறிந்த உண்மை. உடனடியாக தமிழக மீனவ மக்களின் கடல் மீதான உழைப்பின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பொறுப்பற்ற முறையில் கிருஷ்ணாக்கள் பேசுவதை நிறுத்தி எம் மீனவர்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் மீனவ மக்களின் போராட்டங்கள் வெடிக்கும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

    more
  • அதிமுகவில் இணைகிறார் நடிகை ரோஜா?

    ஹைதராபாத்: நடிகை ரோஜா அதிமுகவில் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஹைதராபாத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவரான ரோஜா தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை மணந்தார்.

    சினிமா வாய்ப்புகள் எல்லாம் தேய்ந்து போன பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்தார். முதலில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, காங்கிரசுக்குத் தாவினார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இவரை காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். ஆனால், அவரது மறைவுக்குப் பின் காங்கிரசில் ரோஜாவை கண்டுகொள்ளவே ஆளில்லை.

    இதனால் வேறு கட்சி தேடிக் கொண்டிருந்தவருக்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் நினைவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதே போல குஷ்பு போன்ற கலர்புல் நபர்களை திமுக இழுத்துப் போட்டுள்ளதால் அதிமுகவும் தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்ய நடிகை, நடிகர்களுக்கு வலைவீசி வருகிறது.

    கடந்த தேர்தலில் சிம்ரன், விந்தியா போன்றவர்கள் எல்லாம் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததது நினைவுகூறத்தக்கது.

    இப்போது அதிமுக வீசிய வலையில் ரோஜா சி்க்கியுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் ரோஜா அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து கட்சியில் இணைவார் என்கிறார்கள்.

    ஆனால் சிம்ரன், விந்தியா போல அல்லாமல் ரோஜா தானும் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. குஷ்பு போன்றவர்களை திமுக நிறுத்தினால் எதிர்த்து ரோஜாவை அதிமுக நிறுத்தலாம் என்கிறார்கள்.

    more
  • 'என்கிரிப்ட்' விவகாரம்: பிளாக்பெர்ரி நிறுவனத்துக்கு ஆக 31ம் தேதி வரை மத்திய அரசு கெடு

    டெல்லி: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இமெயில், குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசின் கண்காணிப்புக்கு அனுமதிக்காவிட்டால் இந்தியாவி்ல் பிளாக்பெர்ரி செல்போன் சேவைகளைத் தடை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் மட்டும் 4,00,000 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் பிளாக்பெர்ரி செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிமானோர் பிளாக்பெர்ரி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    கனடைவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இணையதள சேவை, இமெயில், குறுஞ்செய்தி, சமூக வலைதள சேவை போன்ற ஏராளமான வசதிகளை தனது செல்போனில் வழங்குகிறது.

    இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை- செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெர்ரி மொபைலில் இல்லை.

    இதில் ஒருவர் அனுப்பும் எஸ்எம்எஸை அவர் யாருக்கு அனுப்பினாரோ அவரைத் தவிர மற்றவர்களால் இடைமறித்துப் பார்க்க முடியாது. இந்தத எஸ்எம்எஸ் 'என்க்ரிப்ட்' செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சர்வர்கள் கனடாவில் தான் உள்ளன. இதனால் பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ், மெயில் போன்றவற்றை இந்திய உளவுப் பிரிவினரால் இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது.

    இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெர்ரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்ற ஏதுவாகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து, பிளாக்பெர்ரி நிறுவன சேவைகளையும் தனது கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து, அதுகுறித்த விவரங்களை பிளாக்பெர்ரியிடம் கோரியது. ஆனால் இதை ஆரம்பத்தில் இந்நிறுவனம் கண்டுகொள்ளவே இல்லை.

    மேலும் எங்களால் கூட ஒருவர் அனுப்பும் மெயில், எஸ்எம்எஸ்களை இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது என்று பிளாக்பெர்ரி கூறி வருகிறது. அந்த அளவுக்கு பாதுகாப்பான என்கிரிப்ட் செய்யப்படுகிறது என்று கூறுகிறது.

    ஆனால், பிளாக்பெர்ரி எஸ்எம்எஸ்களை மறித்துப் படிக்க அனுமதித்திருக்காவிட்டால் இந்த நிறுவனத்தின் சேவையை ரஷ்யா, சீனாவில் அனுமதித்தே இருக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே அந்த நாட்டு அரசுகளிடம் மட்டும் பணிந்துவிட்டு இந்தியாவி்ல் மட்டும் ரூல் பேச முடியாது என்று பிளாக்பெர்ரி நிறுவனத்திடம் மத்திய அரசு கூறிவிட்டது.

    இதனால் கடுப்படைந்துள்ள மத்திய அரசு பிளாக்பெர்ரிக்கு இறுதிக் கெடு விதித்துள்ளது. இதன்படி, பிளாக்பெர்ரி நிறுவனம் தமது மொபைல் சேவையை கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செய்து கொடுக்காவிட்டால், அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
      
    கூகுள், ஸ்கைப்புக்கும்...

    மத்திய அரசு இதே போன்ற எச்சரிக்கையை கூகுள் மற்றும் இணைய வழி தொலைபேசி சேவையான ஸ்கைப் ஆகியவற்றுக்கும் விடுத்துள்ளது. இந்த இரு நிறுவனங்களின் சேவையையும் முழுமையாகக் கண்காணிக்கும் வகையில் தொழில் நுட்ப விவரங்களை உடனடியாகத் தரவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    more
  • பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

    பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
    பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.
    மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.
    பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

    more
  • 'லீக்' ஆன நடிகை கல்கியின் செக்ஸி காட்சிகள்!

    தி கேர்ள் இன் எல்லோ பூட் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை கல்கி கோச்லின் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் சம்பந்தப்பட்ட படு நெருக்கமான படுக்கை அறைக் காட்சிகள் இணையதளங்களில் லீக் ஆகி விட்டன.

    நடிகை கல்கியும், அனுராக் காஷ்யப்பும் இணைந்து தி கேர்ள் இன் எல்லோ பூட் என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கல்கியும், அனுராக்கும் இணைந்து படு நெருக்கமான படுக்கை அறைக் காட்சிகளில் நடித்துள்ளனர். மிக மிக சூடான இந்தக் காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வெனிஸ் மற்றும் டோரன்டோ திரைப்பட விழாவில் திரையிட இந்தப் படம் ஏற்கனவே தேர்வாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் முக்கியமான நெருக்கமான படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகியிருப்பதால் கல்கியும், அனுராக்கும் கவலை அடைந்துள்ளனர்.

    படு நெருக்கமான காட்சிகள் மட்டுமல்லாமல், அதில் பேசப்படும் வசனங்களும் மிக செக்ஸியாக உள்ளனவாம்.

    இந்தப் படம் ஒரு திரில்லர் கதையாகும். கல்கிதான் இப்படத்தின் நாயகி. அவர்தான் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

    more
  • கோவை, திருச்சியையடுத்து... மதுரைக்கு ஜெ., வருகை
    மதுரை : கோவை, திருச்சியை அடுத்து மதுரைக்கு அடுத்த மாதம் மத்தியில்(செப்., 18-21) அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வரவுள்ளார்.

    சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கவிருப்பதை அடுத்து, அ.தி.மு.க., அடுக்கடுக்கான போராட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஆளுங்கட்சியின் குறைகளை பட்டியலிடுகிறார். திருச்சியில் வரும் 14ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதையடுத்து, மதுரை, நெல்லைக்கு ஜெயலலிதா செல்ல திட்டமிட்டுள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செப்., 18 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. மைதானத்தை மாநகராட்சி வழக்க மறுத்ததையடுத்து அ.தி.மு.க., ஐகோர்ட்டில் மனு செய்து அனுமதி பெற்றது. இவ்வழக்கில் ஆஜரான முன்னாள் சபாநாயகரும், மூத்த வக்கீலுமான பி.எச். பாண்டியன், இக்கூட்டத்தில் ஜெ., கலந்து கொள்ளயிருப்பதாக குறிப்பிட்டார். செப்., 18 முதல் 21ம் தேதிக்குள்ளாக ஏதாவது ஒரு தேதியில் ஜெயலலிதா வர வாய்ப்புகள் இருக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அ.தி.மு.க., தலைமை சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என அ.தி.மு.க., வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

    more
  • ஆன்லைன் கணிதம் இந்தியருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு கலிபோர்னியா:  அமெரிக்க வாழ் இந்தியரான வினய் தியோலாலிகர் . இவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எச்.பி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணித நிறுவனம்ஒன்று பி=என்பி என்ன என்ற கேள்விக்கு விடையளித்துள்ளார். இவரது விடையை ஏற்றுக்கொண்ட அந்நிறுவனம் அவருக்கு பரிசுத்தொகையான ஒரு மில்லியன் டாலரை பரிசாக அளித்து கவுரவித்துள்ளது.

    more
  • இலங்கை கடற்படைத் தாக்குதலிலிருந்து தமிழக மீ்னவர்களை காக்க முடியாது-எஸ்.எம்.கிருஷ்ணா
    டெல்லி: சர்வதேச எல்லையாத் தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் போகக் கூடாது. அப்படி போனால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். எனவே தமிழக மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது. மேலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

    ராஜ்யசபாவில் நேற்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், பாஜக உறுப்பினர் வெங்கைய்ய நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, திமுக உறுப்பினர்கள் டி.சிவா, கனிமொழி, மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினர்.

    இந்த விவாதத்தால் ராஜ்யசபா படு சூடாக காணப்பட்டது. இடை இடையே திமுக, அதிமுகவினரும் கடுமையாக வாதிட்டுக்கொண்டனர்.

    அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

    இதையடுத்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பி்ன்னர் மீண்டும் அவை கூடியபோது மறுபடியும் இதே பிரச்சினை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் பேசுகையில்,

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகவுள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு இனிமேலும் சகித்துக் கொள்ளாது என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்திய அரசின் அலட்சியம்-வெங்கையா பாய்ச்சல்

    பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தை இந்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது. தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கடுமையாக குற்றம்சுமத்தினார்.

    திமுக உறுப்பினர் சிவா பேசுகையில், தமிழர்கள் என்றாலே இலங்கை அரசுக்கு ஒவ்வாமையாகவுள்ளது. இதனால் தான் தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும் என்றார்

    கனிமொழி பேசுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்களை தாங்கள் தாக்கவில்லை என்று கூறி வருகிறது. அப்படியென்றால் தமிழக மீனவர்களை தாக்குவது யார்? என்றார்.

    சிபிஐ உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், இலங்கை போர் முடிவுற்ற பின்னரும், இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதை தடுக்க ஒரே வழி இந்தியா இலங்கை இடையே கையெழுத்திடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை அமல்படுத்த தீவிரம் காட்ட வேண்டும்.

    மீனவர்கள் தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். சமூக ரீதியாகவும் பின்தங்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அவர்களை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். போருக்குப்பின்னர் எத்தனை சம்பவங்கள் நடைபெற்றது என கூற விரும்பவில்லை. தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். இலங்கை கடற்படையினரால் சுடப்படுகின்றனர் என்றார்.

    விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய கிருஷ்ணா கூறுகையில்,

    இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை.

    அதேசமயம் சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது.

    2008-ல் இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படும். இதுகுறித்து எனது அடுத்த இலங்கை பயணத்தின் போது அந்நாட்டு தலைவர்களிடம் விவாதிப்பேன்.

    கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் வகையில், நடைபெறும் நிகழ்ச்சிகளை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கச்சத்தீவு பிரச்சனையில் இந்தியாவை எந்த நாடும் அடிபணிய வைக்க முடியாது.

    இலங்கை அதிபர் டெல்லி வந்தபோது மீனவர்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி உள்ளோம். இலங்கை அதிபருடன், இந்திய பிரதமர் இதுகுறித்து விவாதித்துள்ளார். மீனவர்கள் தாக்கப்படுவது கவலை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

    அண்மையில் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது இந்த பிரச்சனையை மத்திய அரசு எழுப்பியது. இலங்கை அரசின் உயர் அரசியல் தலைவரான அந்நாட்டு அதிபரும், இந்திய அரசின் உயர் அரசியல் தலைவரான பிரதமரும் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். இலங்கை அரசிடம் இந்திய அரசு மீண்டும் இப்பிரச்சனை எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்.

    இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக அங்கு 50 ஆயிரம் நிரந்தர வீடுகள் கட்டுவது, அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் தமிழர்களின் மறுகுடியேற்றம் ஆகியவற்றிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க முடியாது, தமிழக மீனவர்கள்தான் தவறு செய்கிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது என ராஜ்யசபாவில் வைத்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா திட்டவட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் எஸ்.எம்.கிருஷ்ணா இப்படிக் கூறியதை திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சியின் உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து சின்ன சலசலப்பைக் கூட ஏற்படுத்தவில்லை. மாறாக, விவாதத்தில் கலந்து கொண்டு அவரவர் கருத்தை மட்டும் தெரிவித்து விட்டு அமர்ந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    more

Enter your email address:

Delivered by FeedBurner