-
இரு நாட்டு மீனவர்கள் இணக்கமாக தொழில் செய்ய இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை தேவை
ராமேஸ்வரம்: "மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடிப்பை கைவிட்டு, இருநாட்டு மீனவர்களும் இணக்கமாக கடலில் மீன்பிடித்தொழில் செய்ய இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் கூறினர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது. தொடர்கதையாகி வரும் தாக்குதல் சம்பவத்திற்கு, தமிழக மீனவர்களின் மீன்பிடிப்பு முறைகளும் ஒரு காரணம். இருநாட்டு மீனவர்களும் இணக்கமாக மீன்பிடித்தொழில் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக மீனவர்களை சந்திக்க இலங்கை யாழ்பாணம் வடமராச்சி வடக்கு பகுதி மீனவர் சங்க தலைவர் சூரியகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் 20 பேர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். பாம்பன் வடக்கு துறைமுகம் மற்றும் ராமேஸ்வரம் துறைமுகத்தை பார்வையிட்டு, கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை பார்த்து "ஒரே இடத்தில் இத்தனை படகுகளா?' என அதிர்ச்சியடைந்தனர். பின் மீனவர்களையும் , மீனவ சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தனர். இலங்கை மீனவ பிரதிநிதி குழு தலைவர் சூரியகுமார் கூறியதாவது: பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மட்டும் மீன்பிடித்தொழிலை நம்பி, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன்வளத்தை அழிக்கக்கூடிய வலையை பயன்படுத்தி, இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் மீன்வளம் அழிவதோடு, எதிர்காலத்தில் ராமேஸ்வரம் கடல் பகுதிபோல் இலங்கை கடல் பகுதியும் மீன்வளம் அற்றதாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடிவலைகளை தவிர்ப்பதோடு இலங்கை கரை பகுதியில், மீன்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்திய-இலங்கை அரசுகள் பாக்ஜலசந்தி கடலில் மீன்வளத்தை காப்பதோடு, இருநாட்டு மீனவர்களும் நட்புறவுடன் மீன்பிடித் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இலங்கை மீன்வளத்துறை அதிகாரி லால் டி சில்வா கூறியதாவது: தமிழக மீனவர்கள் மீன்வளத்தை அழிக்கும் தடை செய்யப்பட்ட வலைகளை தவிர்த்து, மீன்பிடி முறைகளை மாற்றி மீன்பிடித்தால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரலாம். தமிழக மீனவர்களுடன் நேரிடியாக பேச்சுவார்த்தை நடத்துவது நல்ல முயற்சி. பேச்சுவார்த்தையின் எடுக்கப்படும் முடிவு குறித்து, இலங்கை மீன்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தரப்படும். இருநாட்டு அரசுகளும் இதையே விரும்புகின்றன, என்றார்.

0 comments: