-
கேரள கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன
கொல்லம்: கேரளாவில் கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையிலான கடல் பகுதி நேற்று மதியம் திடீரென இருட்டானது. பல இடங்களில் கடல் கொந்தளித்து 15 அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்ந்தன. அதில் சிறுவன் பலியானதாகத் தெரிகிறது. இதனால் கடலில் படகு ஒன்றும் கவிழ்ந்தது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மதியம் 2 மணி அளவில் கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையிலான தென்கேரள கடல் பகுதியில் திடீரென இருட்டு பரவியது. இரவு போல் கும்மிருட்டு பரவியதால் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பீதி அடைந்தனர். அந்த நேரத்தில் கடலும் கடுமையாக கொந்தளித்தது. இதனால் மீனவர்கள் கரைக்கு வேகமாகத் திரும்பினர்.
இதற்கிடையே பூந்துறை மீனவ கிராமத்தில திடீரென அலைகள் 15 அடி உயரத்திற்கு எழுந்தன. இதில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை அலை இழுத்துச் சென்றது. அவனைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. கொல்லம் அழிக்கால் பகுதியில் கடலில் ஏற்பட்ட திடீர் சூறாவளியால் ஒரு படகு கவிழ்ந்து 17 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். 1 மீனவர் பலியானதாக அஞ்சப்படுகிறது. கடலில் ஏற்பட்ட திடீர் இருட்டு காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது

0 comments: