-
இந்திய அணி படுதோல்வி : 88 ரன்களுக்கு சுருண்டது : நியூசிலாந்து அபார ஆட்டம்
தம்புலா :முத்தரப்பு தொடரை இந்திய அணி படு மோசமாக துவக்கியது.நேற்று நடந்த முதல் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்ப லாக ஆட, 88 ரன்களுக்கு சுருண்டது. 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி நியூசிலாந்து அணிக்கு, கேப்டன் ரோஸ் டெய்லரின் அதிரடி ஆட்டம் பக்கபலமாக அமைந்தது.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. தம்புலாவில் நேற்று நடந்த முதல் போட்டியில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் ரோஸ் டெய்லர், பேட்டிங் தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:நியூசிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. பிரவீண் குமார் பந்து வீச்சில், 11 ரன்களுக்கு அவுட்டானார் கப்டில். இங்ராம் (12) நெஹ்ராவிடம் வீழ்ந்தார். அறிமுக வீரராக களமி றங்கிய வில்லியம்சன் "டக்' அவுட்டானார். இதை யடுத்து 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
சூப்பர் ஜோடி: இதற்கு பின் கேப்டன் ரோஸ் டெய்லர், ஸ்டைரிஸ் இணைந்து அணியை சரிவிலிருந்து சூப்பராக மீட்டனர். பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி, இந்திய பந்து வீச்சை சிதறடித்தது. ஒரு நாள் அரங்கில் ரோஸ் டெய்லர் 16வது மற்றும் ஸ்டைரிஸ் 25 வது அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 4 வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்த நிலையில், ஸ்டைரிஸ் (89) அவுட் டானார். இவர் 9 பவுண்டரி 1 சிக்சர் விளாசினார். அடுத்து வந்த ஓரம் (14) ஏமாற்றினார்.
சதம் நழுவல்: ரோஸ் டெய்லர் 95 ரன்களுக்கு (8 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகி, சதத்தை நழுவ விட்டார். எலியட் (7) சொதப்பினார். "டெயிலெண்டரான' டபி(19) ஓரளவு ரன் சேர்த்தார். நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 288 ரன்களுக்கு ஆல்-அவுட் டானது. இந்திய தரப்பில் நெஹ்ரா 4, பிரவீண் 3 விக்கெட் வீழ்த்தினர்.
சேவக் "அவுட்': சற்று கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, சேவக், தினேஷ் கார்த்திக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. 3 பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் சேர்த்த சேவக், மில்ஸ் வேகத்தில் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே தினேஷ் கார்த்திக்கும் (14) அவுட்டானார்.
சுருண்டது இந்தியா: பின் ரோகித் சர்மாவுடன் இணைந்தார் யுவராஜ் சிங். டபி பந்து வீச்சில் அனல் பறந்தது. இவரது வேகத்தில் ரோகித் (4) சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரெய்னா வையும் (6) அவுட்டாக்கி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார் டபி. அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்புடன் களமிறங்கிய தோனிக்கு, யுவராஜ் "வில்லனாக' மாறினார். டபி வீசிய பந்தை தட்டி விட்டார் தோனி. மறுமுனையில் தேவையில்லாமல், ரன் ஓட துவக்கம் தந்தார் யுவ ராஜ். இதனால் அவசரப் பட்ட தோனி (2), ரன் அவுட்டானார். 25 பந்து களை எதிர்கொண்டு வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார் யுவராஜ். பின்வரிசையில் பிரவீண் (1), மிதுன் (4), நெஹ்ரா (4) சொதப்ப, 29.3 ஓவர் முடிவில் "ஆல்- அவுட்டான' இந்திய அணி வெறும் 88 ரன்களுக்கு சுருண்டு, படுதோல்வி அடைந்தது. நியூசிலாந்து தரப்பில் டபி 3, மில்ஸ், ஓரம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இவ்வெற்றி யின் மூலம் நியூசிலாந்து அணி 4 புள்ளிகள் பெற்றது. தவிர, போனசாக ஒரு புள்ளி பெற்றது.
குறைந்த ஸ்கோர் :நியூசிலாந்துக்கு எதிராக நேற்று 88 ரன்கள் சேர்த்த இந்திய அணி, ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தனது 5 வது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இப்பட்டிய லில் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக மிகக்குறைவாக 54 ரன் (ஷார்ஜா - 2000) எடுத்துள்ளது.50 விக்கெட் இந்திய வீரர் பிரவீண் குமார் நேற்று ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 50வது விக்கெட் (41 போட்டி) கைப்பற்றினார்.
ஸ்டைரிஸ் "4000' "நேற்றைய போட்டியில், 58 ரன்கள் எடுத்திருந்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 4000 ரன்களை எட்டிய 7 வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார் ஸ்டைரிஸ். இவர், 166 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கு முன், பிளமிங் (8007 ரன்), ஆஸ்லே (7090), கிறிஸ் கெய்ர்ன்ஸ் (4881), மெக்மிலன் (4707), குரோவ் (4704), ஹாரிஸ் (4379) ஆகியோர் நியூசிலாந்து தரப்பில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
* தனது முதல் ஒரு நாள் போட்டியில், நேற்று களமிறங்கிய நியூசிலாந்து வீரர் வில்லியம்சன், டக்-அவுட்டானார். இதன் மூலம் அறிமுக போட்டியில், களமிறங்கி "டக்-அவுட்டான' 15 வது நியூசிலாந்து வீரரானார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments: