• 10 ஆயிரம் பேர் தேவைக்கு 1.74 லட்சம் பேர் போட்டி : 22 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு



    சென்னை :இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. 10 ஆயிரம் பேர் தேவைக்கு, 17 மடங்கு அளவுக்கு 1.74 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில், 22 ஆயிரம் பேர் பெண்கள்.

    தமிழகத்தில் காலியிடங்களை நிரப்பும் வகையில், 9,000 இரண்டாம் நிலை காவலர்கள், 487 சிறைக்காவலர்கள், 630 தீயணைப்பு வீரர்கள் என, மொத்தம் 10 ஆயிரத்து 117 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று எழுத்துத் தேர்வு நடந்தது. 32 மாவட்டங்களில், 105 மையங்களில் தேர்வு நடந்தது.இதற்காக ஒரு லட்சத்து 84 ஆயிரத்து, 632 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 22 ஆயிரத்து 790 பெண்கள் உட்பட, 1.74 லட்சம் பேர் நேற்று தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் ஏழாயிரம் பேர் தேர்வெழுதினர்.

    சென்னை புறநகரில் எம்.ஐ.டி., தொழில்நுட்பக் கல்லூரியில் தேர்வு நடந்தது. இங்கு, 886 பெண்கள் உட்பட, 3,146 பேர் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.தேர்வெழுத வந்தோர், மைய வாயிலில் சோதிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த மொபைல் போன்களை வாங்கிய போலீசார், "டோக்கன்' கொடுத்து, அவற்றை தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தனர். மொத்தம் 10 ஆயிரத்து 117 இடங்களுக்கு, 1.74 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாயிரத்து 929 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அதில், மூன்றாயிரத்து 632 பேர் நேற்று தேர்வு எழுதினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரியில் எழுத்துத் தேர்வு நடந்தது. நான்காயிரத்து 288 ஆண்கள், 448  பெண்கள் என, மொத்தம் நான்காயிரத்து 736 பேர் தேர்வு எழுதினர்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த போலீஸ் எழுத்து தேர்வில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.தமிழகத்தில் பல மையங்களிலும் ஆர்வமாக பலரும் வந்து தேர்வு  எழுதியுள்ளனர்.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner