-
களவாணி பட விமர்சனம்
தஞ்சை மாவட்டத்திலுள்ள அந்த இரு சிற்றூர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை. காரணம், களவுபோன சாமி சிலை. அதிலும் களவாணித்தனம் செய்து கொண்டு திரியும் விமலுக்கும் எதிர் ஊரில் ரவுடித்தனம் செய்யும் திருமுருகனுக்கும் அடிக்கடி மோதல். இந்நிலையில் திருமுருகனின் தங்கை ஓவியாவை காதலிக்கிறார் விமல். இந்த காதலுக்கு திருமுருகன் மட்டுமின்றி, அவர்கள் ஊரே எதிர்ப்பு காட்டி நிற்கிறது. அதை மீறி தனது களவாணித்தனத்தால் காதலியை விமல் கரம்பிடிப்பது, கல கல கிளைமாக்ஸ்.
கதையில் புது விஷயம் எதுவும் இல்லை. கதை சொன்ன விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பதுதான் 'களவாணி' ஸ்பெஷல். முதல் காட்சியில் சிறுவர்களின் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இரு ஊர் சிறுவர்கள் மோதிக்கொள்ளும்போதே ஊர் பிரச்னையை ஜாலியாக சொல்லப்போகிறார்கள் என்பதை சூசகமாக சொல்கிறது படம். வன்முறை, திடுக்கிடு¢ம் காட்சிகள் இல்லாமல் அதை கடைசிவரை மெயின்டைன் செய்திருப்பது பேஷ் பேஷ்.
துபாயில் அப்பா இளவரசு சம்பாதித்து பணத்தை அனுப்புகிறார். அதை அம்மா சரண்யாவை மிரட்டி விமல் வாங்குவது, தனது நண்பர் குழுவுடன் சேர்ந்து கஞ்சா கருப்பை கலாய்ப்பது, ஒரே பஸ்சில் பயணிக்கும் இரண்டு பெண்களை ஓரிடத்தில் நின்றபடியே ப்ராக்கெட் போடுவது, காதலிக்கு உதவ அவரது பள்ளி பாடத்தை தங்கையை வைத்து எழுதச் செய்வது, தங்கைக்காக அப்பா கொண்டு வந்த உடைகள், மேக்அப் பொருளை தான் வாங்கியதாக காதலியிடம் தருவது என அக்மார்க் களவாணித்தன நடிப்பில் க்ளிக் ஆகிறார் விமல். 'பசங்க' படத்துடன் ஒப்பிடும்போது நடிப்பில் புரமோஷன் வாங்கியிருக்கிறார். புதுமுகம் ஓவியா, அச¢சு அசலாய் கிராமத்து மாணவி. காதல் வயப்பட்டு, 'உன¢னை கட்டிக்கிறேன்' என சொல்லும்போது லபக்கென இளசு இதயங்களில் டேரா போடுகிறார். புதுமுகம் திருமுருகன், கோலிவுட்டில் ரவுண்ட் அடிப்பார். அப்பாவித்தனமாய் விமல் கோஷ்டியிடம் சிக்கி, சுக்கு நூறாகும் கேரக்டரில் சிரிக்க வைக்கிறார் கஞ்சா கருப்பு. மகனின் தில்லுமுல்லு செயல்களையும் நியாயமாக்கும் பாசிட்டிவ் அம்மாவாக பளிச்சிடுகிறார் சரண்யா. இளவரசு, சூரி என அனைவருமே கச்சிதம்.
முதல் பாதியில் சில காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாம். அதிலும் ஓவியா பள்ளிக்கு செல்வதும் விமல் அவரை வழிமறிப்பதும் என அடிக்கடி காட்டுவதை தவிர்த்திருக்கலாம். திருமுருகன் யாருக்கு என்ன உறவு என்பது இடைவேளைக்கு பின்பே தெரிகிறது. எஸ்.எஸ். குமரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு கதையோடு கைகோர்த்துள்ளது. இயக்குனர் சற்குணத்துக்கு இது முதல் படம். யதார்த்த சினிமாவை இப்படியும் தரலாம் என நினைவூட்டியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: