-
தமிழ் மீதுதான் ஆர்வம் தமிழ் சினிமா மீதல்ல : அமெரிக்க தமிழறிஞர்தமிழ் மீதுதான் ஆர்வம் தமிழ் சினிமா மீதல்ல : அமெரிக்க தமிழறிஞர்
கோவை : "தமிழ் மீதுதான் ஆர்வமே தவிர, தமிழ் சினிமா மீது கிடையாது,' என, அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர் கூறினார்.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ்ஹார்ட் பங்கேற்றார்.
ஆய்வரங்க தொடக்கவிழா முடிந்ததும் அவர் பேசுகையில்,"" ஆர்வத்துடன் சமஸ்கிருதம் படித்து கொண்டிருந்தபோதுதான், தமிழின் பழமை தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, தமிழறிஞர் ராமானுஜம் மூலம் தமிழ் படித்தேன். தமிழின் சிறப்புகள் பிடித்து போனதால், தொடர்ந்து தமிழை படித்து வருகிறேன். எனது மனைவி கவுசல்யா மதுரையைச் சேர்ந்தவர். அவர் சினிமா படங்களை ஆர்வத்துடன் பார்ப்பார். ஆனால் எனக்கு சினிமா படங்களை விட, தமிழ் மீதுதான் ஆர்வம் அதிகம்,'' என்றார்.
எழுத்துச் சீர்திருத்தம்: நாசா விஞ்ஞானி வலியுறுத்தல் : அமெரிக்க விண்வெளித்துறையில், பல விண்வெளித் திட்டங்களில் முக்கிய பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழர் நா.கணேசன் தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணத்திலும், எழுத்துச் சீர்மை பிரிவிலும் தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இவர் இல்லத்தில் வைத்திருக்கும் மொழி, இலக்கியம் சார்ந்த நூல்களின் தொகுதியைக் கண்டால், இது என்ன பல்கலைக்கழகமா... என்று வியக்கும் அளவிற்கு நூல்களைச் சேர்த்து வைத்து, கற்றுத் தெளிந்தவர். அமெரிக்கத் தமிழறிஞர்கள் பலர் ஏதேனும் தமிழ் நூல்களைத் தேடினால்,முதலில் இவரிடம் உள்ளதா என்று கேட்டுப் பின்னரே மற்ற இடங்களில் தேடுவார்கள்.
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அவர், தினமலர் இதழுக்காக அளித்த பேட்டி:தமிழை இன்றைய சூழ்நிலையில் பயன்படுத்த, அதன் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.1978லிருந்து இந்த சீர்திருத்தம் குறித்த விவாதம், தமிழ் அறிஞர்கள் மற்றும் இப்போது கம்ப்யூட்டர் அறிஞர்கள் இடையே நடந்து வருகிறது.உயிர்மெய் எழுத்துக்களை எழுதுகையில், இப்போது இணைத்து எழுதுகின்ற வழக்கத்திற்குப் பதிலாக, அனைத்து மெய்யெழுத்துக்களுக்கும் பொதுவான சார்பெழுத்துக்களை உருவாக்க வேண்டும். இதனால் அனைத்து மெய்யெழுத்துக்களும் ஒரே மாதிரியான சார்பெழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்படும். இதன் மூலம் உயிர்மெய் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் தான் என்று காட்டுவது எளிதாகிவிடும். இப்போது கிரந்த எழுத்துக்களை (ஸ்,ஷ்,ஜ்) இப்படித்தான் எழுதுகிறோம். எனவே இதே முறையினைத் தமிழ் மெய்யெழுத்துக்களுக்கும் இணைத்துப் பயன்படுத்துவது பெரிய அழிவு ஒன்றும் ஏற்படாது.
உடனே அரசாணை உருவாக்கி, இதனைக் கட்டாயப்படுத்த நான் சொல்லவில்லை. இப்போதிருக்கின்ற வழக்கத்தினையும், எழுத்துச் சீர்திருத்தம் சார்ந்த வழக்கத்தினையும் வைத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு இதனைக் கற்றுக் கொடுக்கலாம். பிற்காலத்தில், இப்போது நாம் கற்றுக் கொடுக்கிற இதையே குழந்தைகள் பிற்காலத்தில் நிலை நிறுத்திவிடுவர். பத்திரிகைகள் இந்த எழுத்துச் சீர்திருத்தம் குறித்து இரு தரப்பு கருத்துக்களையும் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு சிலர் இதனைச் சத்தமாக எதிர்க்கிறார்கள் என்பதற்காக, அதுவே சரி என்று விட்டுவிடக் கூடாது. மலையாளத்தில் 68லேயே லெக்ஸிகனில் உகர ஊகார உயிர்மெய் எழுத்துக்களைப் பிரித்து எழுத அரசு ஆணையிட்டு நடைமுறைப்படுத்தி உள்ளனர். இதனால் மலையாளம் செத்துப் போய்விடவில்லை. மலையாள மொழி கீழே போய்விடப் போவதில்லை. எனவே இந்த சீர்திருத்தம் குறித்துச் சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தினமலர் இது குறித்த விவாதங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு நா.கணேசன் தெரிவித்தார்.

0 comments: